மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்!

புனிதமான நீர்நிலைகள் யாவும் இறைவனின் திருமேனிகளேயாகும். பெருங்கடல்கள், வற்றாது ஓடும் ஜீவநதிகள், மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடி வரும் ஆறுகள், அருவிகள், குளங்கள், ஏரிகள், சுனைகள் யாவும் இறைவனின் பல்வகை வடிவங்களே ஆகும். இதை உணர்த்தும் வகையில் இவற்றின் கரையில் சிவபெருமான் திருக்கோயில் ெகாண்டு அருள்பாலிக்கின்றான். மனித நாகரீகங்கள் யாவும் ஆற்றின் கரையிலேயே தோன்றியதாகும். எனவே, ஆறுகள் மானுட வாழ்வில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நாகரீகத்தில், சிறப்படைந்த மனிதன் ஆதியில் ஆற்றங்கரைகளில் இறைவனுக்குத் திருக்கோயில்களை அமைத்து வழிபட்டான். இவை ஆற்றுத்தளிகள் என்று அழைக்கப்பட்டன. ஆறுகளின் பெயரால் இறைவன் கங்காதீசர், யமுனேசுவரர், பாலீசர், வாருணீசுவரர், காவேரிநாதர், ஆரணீசர் முதலிய பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். திருவையாற்றிலுள்ள ஐயாறப்பர் ஆலயம் தேவாரத்தில் காவிரியின் பெயரால் ‘காவிரிக்கோட்டம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆறுகள் ஒன்றோடு ஒன்று கூடும் சங்கமத்துறைகளில் சிவபெருமான் மகிழ்வுடன் வீற்றிருக்கின்றார். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் கூடும் பிரயாகை, காவேரி, அமுதநதி, பவானி ஆகியன கூடும் (பவானி) நணா முதலிய கூடுதுறைகளில் பெருமான் தனிச்சிறப்புடன் வீற்றிருக்கின்றார். இந்நிலையில், இவருக்குச் சங்கமேசுவரர் எனும் பெயர் வழங்குகிறது.ஆறுகளுக்கு அடுத்த நிலையில் சிறப்புடன் போற்றப்படுபவை திருக்குளங்கள் ஆகும். ஆற்றங்கரையில் இருந்து குடிபெயர்ந்த மனிதன் நல்ல நீர்நிரம்பிய குளங்களின் கரையில் குடியேறினான்.குளங்களைச்சுற்றி அமைந்த ஊர்கள் குளப்பாக்கம், குளமங்கலம் எனப் பலவாறு அழைக்கப்பட்டன. இவ்வூர்களில், எழுந்தருளும் பெருமான் குளந்தையப்பன், தீர்த்தபுரீசர், குளந்தையீசர் எனும் பெயர் பெற்றார். (குளம்+எந்தை=குளந்தை: குளமாக இருக்கும் எனது தந்தை என்பது இதன் பொருள்) குளந்தையீசர் என்பது வடமொழியில் `தடாகபுரீசுவரர்’ என வழங்குகிறது. வடாற்காடு மாவட்டத்திலுள்ள குளத்தூரில் (மடம்) தடாகபுரீசுவரர் ஆலயம் உள்ளது. கயம் என்பதற்குக் குளம் என்பது பொருள்.இதையொட்டிக் கயப்பாக்கம், கயத்தூர் முதலிய ஊர்கள் உண்டாயின. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கயப்பாக்கம் எனும் சிற்றூரும் அதில் தீர்த்தபுரீசுவரர் ஆலயமும் உள்ளன. காலப்போக்கில் ஆலயங்களைச் சுற்றி மேலும் பல குளங்களை அமைத்து அன்பர்கள் சிவவழிபாடு செய்தனர். இக்குளங்கள் இவற்றை அமைத்தவர் பெயரால் சிவகங்கை, பிரமன், விஷ்ணு, திருமகள், வாலி, சக்ரதீர்த்தம் முதலிய பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.குளங்களை விட பரப்பில் சிறிய ஆழமான நீர்நிலை கிணறு (கூபம்) ஆகும். கிணறுகளைச் சுற்றி அமைந்த ஊர்கள் கூவத்தூர். `கூவல்’ என்று பெயர் பெற்றன. இத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமானுக்குக் கூவல்நாதர், கூவலப்பர் என்ற பெயர்கள் வழங்குகின்றன. தென்னகத்து ஆலயங்களில் எண்ணற்ற கிணறுகள் தீர்த்தங்களாக உள்ளன. இவற்றின் சிறப்பு பற்றி இவற்றிற்கு அனேக பெயர்கள் வழங்கப்படுகின்றன. சிதம்பரம் சிற்சபையை ஒட்டியுள்ள பரமானந்த கூபம். திருக்கடவூரிலுள்ள அசுபதிதீர்த்தம், காசிநகரிலுள்ள ஆனந்தவாபி முதலியன கிணறுவடிவிலான சிறந்த தீர்த்தங்களாகும்.குளங்களைவிடப் பெரிய நீர்நிலைகள் ஏரிகள் எனப்பட்டன. ஏரிகளில் இருந்து நீர் வெளியேறும் பகுதி `மதகு’ எனப்பட்டது. மதகின் அருகில் எழுந்தருளியிருப்பதால் பெருமான் மதகீசர் என்றழைக்கப்படுகிறார். வடாற்காடு மாவட்ட சீயமங்கலம் தூணாண்டார் கோயில், குரங்கணிமுட்டம் கொய்யாமலரீசர் கோயில், முதலியவற்றைச் சுற்றிலும் விரிந்து பரந்த ஏரிகள் இருக்கின்றன. மலைகளிலுள்ள சுனைகளும், அருவிகளும் கூட புராணச் சிறப்புமிக்க தீர்த்தங்களாக விளங்குகின்றன. திருக்குற்றாலம், பாபநாசம் முதலிய மலைத்தலங்களில் அருவிகள் தீர்த்தங்களாக உள்ளன. திருவண்ணாமலையில் துர்கா தேவி தன் கை வாளால் ஒரு பாறையைப் பிளந்து உண்டாக்கிய `கட்கதீர்த்தம்’ என்ற சுனை உள்ளது. இதன் கரையில் சிவபெருமான் கட்கேசர் எனும் பெயரில் வீற்றிருக்கின்றனர். திருஞானசம்பந்தர் கொடுங்குன்றத்திலிருந்த ‘குட்டாச்சுனை’ எனும் சுனையைக் குறித்துள்ளார். இது குட்டநோயைத் தீர்க்கும் வல்லமை பெற்றது என்று கூறுவர்.இயற்கையாகவே, பொங்கிவரும் நீரூற்று களும் தெய்வத்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகின்றன. ஊற்றுக்களின் கரையில் வீற்றிருக்கும் சிவபெருமான் ஊற்றீசுவரர் எனப்படுகிறார். இமயமலைச்சாரலில் பனியின் குளிருக்கும் நடுவே கெளரிகுண்டம், பத்மாசுரகுண்டம், பிரம்மகுண்டம் முதலான அனேக வெந்நீர் நீரூற்றுக்கள் உள்ளன. இவை குளிருக்கு நடுவே மக்களுக்கு இதத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. தொண்டை நாட்டு இராமகிரி (காரிக்கரை)யில் கண்ணுக்குப் புலப்படாத இடத்திருந்து வரும் நீரூற்று ஒரு நந்தியின் வாயிலிருந்து வெளிப்பட்டு ஒரு குளத்தில் விழுந்து ஓடுகிறது. இதன் கரையில் பெருமான் `வாலீசர்’ எனும் பெயரில் வீற்றிருக்கின்றார்.தீர்த்தங்களில் மிகப்பெரியது சமுத்திரமாகும். சமுத்திரத்திற்கு சாகரம் என்பதும் பெயராகும். இப்பெயரால், இறைவன் `சப்தசாகரேசுவரர்’ என்று அழைக்கப்படுகிறார். மதுரையில் சப்தசாகரேசுவரர் ஆலயம் உள்ளது. காசியில் நான்கு கடல்கள் வழிபட்ட சதுரசாகரதீர்த்தமும் அதன் கரையில் நான்கு லிங்கங்களும் உள்ளன.கடலுக்கு நடுவில் குதிரைமுகம் கொண்ட வடவாமுகாக்கினி எனும் பெருந்தீ உள்ளது. இதுவே கடல் பொங்கி விடாமல் பார்த்துக் கொள்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதையொட்டி கடலுக்கு அக்னி தீர்த்தம் என்பது பெயராயிற்று. கடற்கரையில் உள்ள அனேக தலங்களில் இறைவன் அக்னீசர் எனும் பெயரில் வீற்றிருக்கின்றார்.வங்கக் கடலோரம் உள்ள வெடால் எனும் ஊரில் “வடவாமுகாக்கினீசுவரர்” எனும் பெயரில் சிவபெருமான் கோயில் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வாறு கிணறு, ஏரி, சுனை, கடல் பகுதி, ஊற்றுநீர் என்ற பலவகையான வடிவங்களில் சிறப்புமிக்க தீர்த்தங்கள் இருப்பதை மகாபுராணங்களால் அறிகிறோம்.தீர்த்த புராணங்கள்தெய்வங்களின் பெருமைகளையும் அவை வீற்றிருக்கும் தலங்களின் சிறப்புக்களையும் விளக்கத் தலபுராணங்கள் எழுந்ததைப் போலவே திருத்தலங்களில் ஒட்டி அமைந்துள்ள தீர்த்தங்களின் பெருமைகளை விளக்கிக்கூற சில புராணங்கள் தோன்றின. இவை ‘தீர்த்த புராணங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. காவிரியின் பெருமையை விளக்க எழுந்த நூல் ‘காவிரிப்புராண’ மாகும். பதினெண் மகாபுராணங்களில் ஒன்றான பிரம்மகைவர்த்த புராணத்திலுள்ள செய்திகளை அடியொற்றித் திருமறைக்காடு சிற்றம்பல முனிவரால், 1474 பாடல்களால் இது பாடப்பட்டதாகும். காவிரி வாழ்த்துடன் தொடங்கும் இந்நூல், அனவத்தை என்பவளுக்கு அவனுடைய கணவனான நாதசன்மா என்பவர் காவிரியின் வரலாற்றையும் சிறப்புக்களையும் விவரித்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது. இதில், அனேக துணைக் கதைகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், 1939 ஆம் ஆண்டில் காஞ்சி காமகோடி பீடாபதிகளின் அருளாணையின் வண்ணம் ‘காவேரி ரகசியம்’ எனும் நூல் தொகுத்து வெளிடப்பட்டது. காவேரியின் உற்பத்தித்தானமாக சைய மலைகளில் தொடங்கிக் கடலோடு கலக்குமிடமான பூம்புகார் வரையிலுள்ள சைவ திருத்தலங்கள், வைணவ திருப்பதிகள் ஆகியவற்றின் சிறப்புகள் புராண, இலக்கிய, தோத்திர நூல்களிலுள்ள காவிரியைப் போற்றும் பகுதிகள், உபநதிகளின் கரையிலுள்ள திருத்தலங்கள் காவிரி ஸ்நானம் மற்றும் காவிரி பூஜா விதிகள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இடையிடையே அரிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. தென்பாண்டி நாட்டினை வளப்படுத்தும் நதியான தாமிரபரணி ஆற்றின் பெருமைகளை விளக்க எழுந்தது ‘பொருநை புராணம் என்கிற தாமிரபரணி மகாத்மியம்’ ஆகும். இது பதினெண் புராணங்களில் ஒன்றாகிய சிவபுராணத்தினை அடியொற்றி எழுந்ததாகும். இதில் அகத்தியர் பெருமை அவர் தாமிரபரணியை உற்பத்தி செய்தது. அதன் கரையிலுள்ள தலங்களின் பெருமை, தீர்த்தமாடுவதின் மகிமை ஆகியன கூறப்பட்டுள்ளன. காளஹஸ்திக்கு வடக்கிலுள்ள பிரம்மகிரி மலையில் உற்பத்தியாகி ஆந்திரத்தை வளப்படுத்தும் பொன்முகலி ஆற்றின் பெருமையை ‘சொர்ணமுகி மகாத்மியம்’ விளக்குகிறது. இதில், திருமால் வீற்றிருக்கும் திருப்பதி, காளத்தியில் கொலுவிருக்கும் மணிகண்டீசர், காளத்திநாதர் முதலிய அனேக திருக்கோயில்களின் மகிமைகள் விளக்கப்பட்டுள்ளன. தனியாக எழுந்த புராணங்களைத் தவிர ஒவ்வொரு தலபுராணத்திலும் தீர்த்தமகிமை உரைத்தது எனும் பகுதியில் அந்த நாட்டில், தலத்தில் உள்ள ஆறு, ஏரி, குளம் முதலிய தீர்த்தங்களின் பெருமைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இவ்வகையில், பெரியபுராணத்தில் காவிரி, வைகை, பாலாறு முதலான ஆறுகளின் சிறப்புக்களும் அனேக தீர்த்தங்களின் பெருமைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.காஞ்சிப் புராணத்தில் கம்பா நதி, வேகவதி, சேயாறு முதலான ஆறுகளின் சிறப்புக்களும், காஞ்சிபுரத்திலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட தீர்த்தங்களின் சிறப்புக்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தலபுராணங்களில் மட்டுமின்றி நாட்டுப்புற இலக்கியங்களிலும் அந்தந்தப் பகுதியிலுள்ள தீர்த்தங்களின் மகிமை விவரித்துக் கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகப் பச்சையம்மன் கதையில் சேயாறு உற்பத்தியாகி அம்பிகையின் பூசைக்கு உதவுவது, அதன் கரையிலுள்ள சப்தகரைகண்டம், சப்த கயிலாயங்கள், இளையனார் வேலூர், கடம்பர் கோவில் முதலிய தலங்களின் பெருமைகள் விளக்கப்பட்டுள்ளன.புனித நீர்நிலைகளின் பெருமைகளை, மட்டுமின்றி மாதவாரியாக தீர்த்தமாடுவதின் பயன்களை விவரித்துக் கூறும் நூல்களும் உள்ளன. மகரராசியில், சூரியன் சஞ்சரிக்கும் மாசிமாதத்தை வடமொழியில் மாகமாதம் என்பர். மாசி மாதப் பெளர்ணமி நாளில் விதிப்படி நீராடுவது ‘மாகநீராடல்’ ஆகும். மாகநீராடலின் மகத்துவங்களையும் விளக்க எழுந்த நூல் மாக புராணமாகும். இது வடமொழியிலுள்ள பதினெண்புராணங்களில் ஒன்றான பாத்ம புராணத்தின் ஒரு பகுதியாகும். இதனைத் தமிழில் சைவசிரோன்மணியாகிய அதிவீரராம பாண்டியர் 1412 பாடல்களால் பாடியுள்ளார். இதில் சிவராத்திரி மகிமை, கார்த்திகை மாத வழிபாடு, திருவாதிரை மகிமை உரைத்தது முதலான அனேக கதைகள் இடம் பெற்றிருப்பினும், வசிட்ட முனிவர் திலீபச்சக்ரவர்த்திக்கு மாசிமாத நீராடுதலின் பெருமைகளை விளக்கிக் கூறும் பகுதியே முதன்மை பெற்றுத் திகழ்கிறது.மாசி மாத நீராடுதலின்போது இப்புராணத்தை படிக்கச் சொல்லிக் கேட்பது தென்பாண்டி நாட்டிலும் இலங்கையிலும் உள்ள வழக்கமாகும். இந்தப் புராணத்தையொட்டி எழுந்த நூல் ‘மாகபுராண அம்மானை’. மேற்படி நூலிலுள்ள கருத்துக்களே இந்த அம்மானைப் பாடலிலும் இடம் பெற்றுள்ளன. இதனை இயற்றியவர் மணவை வீரபத்திரனார் ஆவார். இது போன்றே ‘துலாஸ்நான மகிமை’ `துலாக் காவேரிப் புராணம்’ என்னும் நூல்களும் வெளிவந்துள்ளன. இவை துலாமாதம் என்கிற ஐப்பசி மாதத்தில் காவிரியில் தீர்த்தமாடுவதன் சிறப்புக்களை விவரித்துக் கூறுகின்றன. இதுபோன்ற அனேக நூல்கள் தீர்த்தங்களின் மகிமைகளையும், தீர்த்தமாடுவதால் உண்டாகும் பலன்களையும் தெளிவாகக் கூறுகின்றன.தவளைகளும் தீர்த்தங்களும்திரிபுராந்தகத் தலமான திருவிற்கோலம் திரிபுராந்தகேசுவரர் ஆலயத்திற்கு எதிரில் அமைந்துள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இதில் தவளைகளும், மீன்களும் வாழ்வதில்லை. இத்தனைக்கும், இக்குளம் வயல்வெளிக்கு அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்றே வைத்தீசுவரன் கோயிலுள்ள சித்தாமிர்த தீர்த்தத்திலும் தவளைகள் வாழ்வதில்லை. சதானந்தர் எனும் முனிவர் இங்கு தவம்செய்து கொண்டிருந்தபோது, தன்னைப் பாம்பு விழுங்க வந்ததால் அஞ்சிய ஒரு தவளை அவர்மீது விழுந்து அவருடைய தவத்தைக் கலைத்தது. அவர் கோபம் கொண்டு, “இனி இதில் தவளைகள் வாழக்கூடாது’’ என்று சாபமிட்டுவிட்டார். அதனால், இத்தீர்த்தத்தில் அவை வாழ்வதில்லை. சேலம் சுகவனேசுவரர் ஆலயத்தின் அருகிலும் தவளைகள் வாழாத தீர்த்தம் உள்ளது. இவற்றை வடமொழியில் அமண்டூக தீர்த்தம் என்று அழைக்கின்றனர்.கடற்கரையை ஒட்டி அமைந்த மலைகளில் தெய்வீகச் சிறப்புமிக்க சிறுசுனைகள் இருக்கின்றன. இவற்றில் தவளைகள் வாழ்கின்றன. கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு தலத்திற்கு அருகிலுள்ள, சிறு மலையில் ஒரு கையளவு உள்ள பள்ளத்தில் ஊறிவரும் நீரில் தவளை உள்ளது. அந்த நீர் வேகமாக எடுக்க எடுக்க சுரந்ததென்றும், தவளையை எத்தனை முறை தூக்கி வெளியே விட்டபோதும் விரைந்து வந்து அந்த நீரில் சேர்த்து விட்டதென்றும், தாம் கண்ட அனுபவக் காட்சியை சிதம்பரம் பிரம்ம பரமேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.தீர்த்தங்கள் தெய்வநிலையங்கள்உலகப் படைப்பின்போது முதலில் வானமும், அதிலிருந்து வளியும் (காற்றும்), அதிலிருந்து நெருப்பும், அதிலிருந்து நீரும், அதிலிருந்து பூமியும் உண்டானதாகப் புராணங்கள் கூறுகின்றன. உலக அழிவின்போது பூமியின் மீது நெருப்பு மழை பொழிந்து யாவும் அழியும். அந்த நெருப்பையும் அழித்து நீர் எங்கும் நிறைந்திருக்கும். நீரால் உலகம் அழிவுறும் காலமே பிரளயம் எனப்படும். ஒவ்வொரு யுக முடிவிலும் பிரளயம் உண்டாகி உலகம் அழியும். அந்த வெள்ளத்திலிருந்தே பூமியும் பழையபடி அதில் உயிர்த்தொகுதியும் உண்டாகின்றன. எனவே, தண்ணீரே உலகிற்கு முதலும் முடிவுமாக இருக்கின்றது. இதையொட்டி சமயச் சடங்குகளின் தொடக்கத்திலும், வடிவிலும் தண்ணீர் வழிபடப்படுகிறது. விழாக்கள் தீர்த்த சங்கிரணம் எனும் நீர் எடுத்து வருதலில் தொடங்கித் தீர்த்தவாரி எனும் நீரில் மூழ்கும் சடங்குடன் முடிவடைகின்றன. சிவாலயங்களில் தினமும் காலையில் நீரின் கடவுளான கங்கையை ஆலயத்திற்கு அழைத்துவரும் திருமஞ்சனம் கொண்டு வருதல் எனும் சடங்குடன் பூஜை தொடங்கப்பட்டு, இரவில் தீர்த்தராஜனான பைரவரிடம் பூஜை முடிகிறது. பூஜையில் அகற்றப்படும் நிர்மால்யங்கள் தண்ணீரில் விடப்படுகின்றன.சிவபூஜா துரந்தரர்கள், தாங்கள் தினமும் வழிபடும் க்ஷணிக லிங்கங்கள் பூஜை முடிந்தபின் புனிதத் தீர்த்தத்தில் கரைத்து விடுவது வழக்கம். தினமும், ஓராயிரம் சிவலிங்கங்களை வைத்து வழிபட்ட பாணாசுரன் பூசையின் முடிவில் அவற்றை நர்மதை ஆற்றில் போட்டுக் கொண்டிருந்தான். அவன் தனது வாழ்நாள் முழுவதும் வழிபட்டு ஆற்றில் விட்ட சிவலிங்கங்களே காலப்போக்கில் உறுதிமிக்க கல் லிங்கங்களாக மாறிவிட்டன. அவையே இப்பொழுது கிடைக்கும் பாண லிங்கங்கள் ஆகும்.ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகரைக் களிமண் அல்லது புற்று மண்ணால் செய்து வழிபட்டபின்னர், அந்த உருவத்தை அன்று மாலையோ, மூன்றாம் நாளிலோ ஆறு, குளம், கிணறு, ஏரி ஆகியவற்றில் விட்டு விடுகின்றனர். சென்னையைச் சுற்றியுள்ள ஊர்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டிப் பெரிய விநாயகர் சிலைகள் வணங்கப்படுகின்றன. பின்னர், குறித்த நாளில் அந்தச் சிலைகள் அனைத்தையும் சென்னை மெரீனா கடலில் விட்டு விடுகின்றனர்.இதுபோன்றே மும்பையில் பெரிய அளவில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்பட்டு, அது முடிந்தவுடன் சிலைகள் கடலில் விடப்படுகின்றன. இதுபோன்றே கிராமிய வழிபாட்டில் ஆண்டு தோறும் வழிபடப்படும் மாரியம்மன், மொட்டையம்மன், கங்கையம்மன் முதலிய தெய்வ வழிபாட்டிலும் பூசையின் இறுதியில் பூசிக்கப்பட்ட உருவங்களை நீரில் விட்டுவிடுவது வழக்கம். கொங்கு மாவட்டத்தில், கிராமியத் தெய்வ விழாக்களின் தொடக்கத்தில் மூன்று கிளைகளாகப் பிரியும், அடிமரத்தை மேள தாளத்துடன் மலையிலிருந்து வெட்டிவருகின்றனர்.இதனை அலங்கரித்து நட்டு அதன் மீது பெரிய அகண்டத்தை வைத்து தீ மூட்டுவர். இதற்குக் `கம்பம் போடுதல்’ என்று பெயர். விழா முடியும் வரை அதில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். விழா நாட்களின் காலையிலும், மாலையிலும் அந்த கம்பத்தைச் சுற்றிவந்து ஆடிப்பாடி, மகிழ்வர். விழாவின் முடிவில், மேளதாளத்துடன் அந்த முக்கிளைக்கொம்பைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு பெரிய ஊர்வலமாகச் சென்று அருகிலுள்ள ஆற்றில் விட்டுவிடுகின்றனர்.இவற்றின் மூலம், வழிபாடுகள் யாவும் நீரில் தொடங்கி நீரிலேயே முடியும் வகையில் அமைந்திருப்பதை அறியமுடிகிறது. மனிதன் தாயின் வயிற்றுக்குள் ஒரு நீர்ப்பையில் கருவாகி உருவாகிறான். அறுதியில் உலகின் தாயான தண்ணீரின் மடியில் சாய்கிறான். இதையொட்டி இறந்தவர்களின் உடலைக் கங்கையில் விட்டு வரும் வழக்கம் உள்ளது.பல தெய்வங்கள் அவதாரத்தின் முடிவில் நீரில் மறைந்து விடுவதாகவே புராணங்கள் கூறுகின்றன. இராமர் அவதாரத்தின் முடிவில், சரயு நதியில் மூழ்கி மறைந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. பலராம அவதாரத்தின் இறுதியில் அவர் வெண்ணிறப் பாம்பு வடிவம்கொண்டு மேலைக் கடலின் உள்ளே சென்று மறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது….

Related posts

ருத்ராட்சம் யாரெல்லாம் அணியலாம்!

ஊர்த்துவ நடனம் புரியும் திருவாலங்காடு நடராஜர்!

கலை மணம் கமழும் கிருஷ்ணர் கோயில்