Saturday, July 6, 2024
Home » மாசி மகத்தன்று காமதகனம் புரிந்த வீரட்டானேஸ்வரர்

மாசி மகத்தன்று காமதகனம் புரிந்த வீரட்டானேஸ்வரர்

by kannappan

சிவபெருமானின் தவத்தை கலைத்த காமனை(மன்மதனை) எரித்த நிகழ்வே, காம தகனம் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொற்கை கிராமத்தில். இந்தக்கிராமத்தில் சிவபெருமான் வீரட்டானேஸ்வரர் என்ற நாமத்தில் மூலவராக லிங்க வடிவில் கோயில் கொண்டுள்ளார். உற்சவர் யோகீஸ்வரர் என்ற நாமத்தில் அருட்பாலிக்கிறார். இந்த கிராமத்தின் புராண பெயர் திருக்குறுக்கை.ஆதியில் பரம்பொருளின் எண்ணப்படி தோற்றுவிக்கப்பட்டவர் காமேஸ்வரன். அவர், தன்னிலிருந்து ஒரு சக்தியை உருவாக்கியதே காமேஸ்வரி. இந்த இருவரின் ஒருமித்த சிந்தனையில் தோன்றியவன் மன்மதன். மன்மதன் என்பதற்கு மனதில் ஆசைகளை ஏற்படுத்தி வளர்ப்பவன் என்று பொருள். உலகத் தோற்றத்தைக் கூறும் ரிக் வேதப்பாடலில் காமன் பற்றிய குறிப்பு உள்ளது. முதலில் தோன்றிய தெய்வமாக அதர்வண வேதத்தில் காமன் போற்றப்படுகிறான். மன்மதன் அவனுடைய மனைவியான ரதிதேவி ஆகியோர் உலக சிருஷ்டியின் பொருட்டு உயிர்கள் அனைத்தையும் காம வசப்படுத்துகின்றனர். கரும்பு வில் ஏந்திக் காட்சி தருகிறான் மன்மதன். மீன் கொடி பறக்கும் அவனது தேரை, கிளிகள் இழுக்கின்றன. தாழை மலரின் மடல்களை வாளாயுதமாகக் கொண்ட மன்மதனுக்கு உரிய பருவம். வசந்த காலம் (இளவேனில்). இதனால் இவனை வசந்தன் என்பதும் உண்டு.தாமரை, அசோக புஷ்பம், மாம்பூ, மல்லிகை, நீலத்தாமரை எனும் ஐவகை மலர் அம்புகளை மன்மதன் உயிர்கள் மீது எய்து, காம நோயை ஏற்படுத்துகிறான். இதனால் மானிடர்கள் மட்டுமின்றி, தேவர்களும் காதல் வயப்படுகின்றனர். ஒருமுறை சிவபெருமான் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது, மன்மதன் அவர் மேல் மலரம்புகள் தொடுத்தான். தியானம் கலைந்த பெருமான் கடும் கோபம் கொண்டார். அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய அக்னி, மன்மதனை தகித்துச் சாம்பலாக்கியது. இதுவே ‘காம தகனம்’ எனப்படுகிறது. காமனை அழித்ததால், ‘காமகோபன்’, ‘காமனைக் காய்ந்த கண்ணுதற்கடவுள்’ என்று ஈசன் அழைக்கப்படுகிறார். சிவபெருமான், காமனை எரித்த நிகழ்வை காமதகன விழா என்ற பெயரில் பத்து நாட்கள் பிரம்மோற்ஸவம், மாசி மகத்தன்று இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில் இது. மன்மதன், ரதி உற்ஸவ திருமேனிகள் இத்தலத்தில் உள்ளன.மன்மதன் சாம்பலானதால் துடித்தாள் ரதிதேவி. அவள், சிவபெருமானை வணங்கி தன் கணவனை உயிர்ப்பிக்க மன்றாடினாள். அதனால் மன்மதன் உயிர்ப்பிக்கப்பட்டான். எனினும், அவன் உருவம் அற்றவனாக இருந்தான். இதனால் அவனுக்கு ‘அநங்கன்’ (அங்கமற்றவன், உருவில் என்று பொருள்) என்று பெயர் வந்தது. இப்போது மன்மதனால் இன்பம் துய்க்க முடியாததால், அவனுக்கு உருவம் அளிக்குமாறு சிவபெருமானிடம் ரதிதேவி வேண்டினாள். அதற்குச் செவிசாய்த்த ஈசன், கண்ணபிரானுக்கு மகனாகப் பிறக்கும் வரத்தை அவனுக்கு அருளினார். அப்படிப் பிறந்தவன் தான் பிரத்யும்னன். ரதிதேவி, மாயாவதி எனும் பெயரில் பிறந்து, மன்மதனான பிரத்யும்னனை மணந்தாள். தென்னாட்டுப் புராணங்கள் மன்மதனுக்கு ரதிதேவி மட்டுமே மனைவி என்று சொல்கின்றன.இங்குள்ள சிவமூர்த்தம் காமதகன மூர்த்தி என்று அழைக்கப்பட்டாலும் ரதிதேவிக்கு அருள் செய்து, மன்மதனை எழுப்பி அவர்களுக்கு அருள் புரிந்து கோலத்தில் காட்சி தருகிறது. மாசி மகத்தன்று ரதிதேவிக்கு அருள் புரியும் வைபவமும் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலுக்குத் தென்மேற்கில் விபூதிக் குட்டை என்ற இடம் உள்ளது. இங்குதான் மன்மதன் சாம்பலாக்கப்பட்டான் என்று கருதப்படுகிறது. இந்த இடத்தைத் தோண்டினால் விபூதி போன்ற மண் கிடைக்கிறது. பக்தர்கள் இதை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர். தாமதகனபுரம், ரதி அனுக்கிரகபுரம் என்று புராணங்களால் அழைக்கப்படும் இந்தத் திருத்தலத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களின் பெயர்களும் புராணம் தொடர்புடையனவாக உள்ளன. சிவபெருமான் மீது காமக்கணை எய்யுமாறு தேவர்கள் மன்மதனிடம் விண்ணப்பித்த இடம் தேவனூர். அதை ஏற்று அவன் கங்கணம்(உறுதி) செய்து கொண்ட இடம் கங்கணம்புதூர். வலக்காலை முன் ஊன்றி, இடக் காலை வளைத்து மன்மதன் சிவனாரைக் குறி முன் ஊன்றி, இடக்காலை வளைத்து மன்மதன் சிவனாரைக் குறி பார்த்த இடம் கால்வளைமேடு. வில்லை வளைத்த இடம் வில்லியநல்லூர். பஞ்சபாணங்களை எய்த இடம் ஐவாணநல்லூர். இறைவன், காமனை வென்றபின் வெற்றிக் கூத்தாடிய இடம் கூத்தன் வாழ்க்கை என்று அழைக்கப்படுகின்றன. இங்கு மூலவரான வீரட்டேஸ்வர மூர்த்தி சதுர வடிவ ஆவுடையாருடன் திகழ்கிறார். உற்று நோக்கினால் மன்மதன் எய்த ஐவகை மலர்கள், இவர் மேனியில் பதிந்திருக்கும் தழும்பைக் காணலாம். தாமரை மலரது தழும்பு மற்றவற்றைவிடத் தெளிவாகத் தெரிகிறது. கருவறையின் வடக்குச் சுவரில் காமன் தேரேறி வருதல், மலர் பாணம் தொடுத்தல், இறைவன் யோகத்தில் இருத்தல், மன்மதனை விழியால் எரித்தல் ஆகிய காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. ஊரின் மையத்தில் மாசி மாதத்தில் கரும்பை நட்டு வைத்து, தர்ப்பை மற்றும் மலர்மாலைகளால் அலங்கரிக்கின்றனர். இது மன்மதனாக பாவித்துப் பூஜிக்கப்படுகிறது. பிறகு ஒரு நல்ல நாளில் மன்மதனை எழுப்பும் ஐதீகம் நடைபெறும். காமன் இல்லாவிட்டால், உயிர்ப் பெருக்கம் நடைபெறாது. எனவே, மன்மதன் உயிர்ப்பிக் கப்படுகிறான் என்பதுடன் விழா முடிவடையும். வட நாட்டில் இதையே ஹோலிப் பண்டிகையாக, வண்ணப்பொடியை ஒருவர் மீது ஒருவர் தூவி கோலாகலத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். தீர்த்தவாகு முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 26வது திருத்தலம் ஆகும். நாகை மாவட்டம் மயிலாடுதுறை மணல்மேடு சாலையில் உள்ள ‘கொண்டல்’ எனும் ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொற்கை கிராமம்.தொகுப்பு: ஆர். அபிநயா.

You may also like

Leave a Comment

19 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi