மாங்காடு பிரதான சாலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் இடத்தினை சிறப்பு அதிகாரி ஆய்வு

குன்றத்தூர், அக்.13: மாங்காடு பிரதான சாலையையொட்டி புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தினை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்கள் பகுதிக்கு அனைத்து அரசு பேருந்துகளும் வந்து செல்லும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில், குன்றத்தூரில் இருந்து மாங்காடு செல்லும் பிரதான சாலையில், மாங்காடு பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 5 ஏக்கர் நிலத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. முதல்கட்டமாக, ₹6.40 கோடி மதிப்பீட்டில் பேருந்துகள் எளிதில் வந்து செல்லும் வகையில் பிளாட்பாரம்கள், பயணிகள் உபயோகப்படுத்த நவீன கழிவறைகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஓய்வு எடுக்கும் அறைகள், இருக்கைகள் ஆகியவைகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், இந்த பணிகளுக்கான காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்குமார், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், மாங்காடு நகர் மன்ற தலைவர் சுமதி முருகன் ஆகியோர் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தினை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, ‘இப்பணிகள் விரைவில் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றனர். புதிய பேருந்து நிலையம் வருவதன் மூலம் மாங்காடு சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் எளிதாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் அரசு பேருந்துகள் மூலம் எளிதாக சென்று வர முடியும். இத்திட்டத்தின் மூலம் ஏராளமான பொதுமக்கள் பெரிதும் பயனடைவர். அரசுக்கும் இதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை