மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.132 கோடி நிவாரண உதவி; பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை: தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ல் தொடங்கி 3 கட்டங்களாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.132 கோடி நிவாரண உதவி இன்னும் ஒருசில தினங்களில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கிற முதல் கூட்டத்தொடர் என்கிற காரணத்தால், கடந்த 5ம் தேதி தமிழக கவர்னர் சட்டப்பேரவைக்கு வருகை தந்து வரலாற்று சிறப்புமிக்க முதல் உரை ஆற்றினார்.  பொதுவாக, ஆளுநர் உரை, அரசின் கொள்கை அறிக்கை என்றுதான் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி கவர்னர் உரை, மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டு அமைந்துள்ளது என்பதில் நான் உள்ளபடியே, மகிழ்ச்சி அடைகிறேன். கவர்னருக்கு இந்த அரசின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலே என்னுடைய சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுவது குறித்து இங்கே பேசினார்கள். இந்த அரசு விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை உள்ள அரசு என்பதால், கடந்த அக்டோபர் 25ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட, பின் குறுவை பருவத்தில் விளைந்த பயிர்கள், சேதமடைந்த முன்பருவத்தில் பயிரிடப்பட்ட விளைந்த சம்பா நெற்பயிர்கள், மறு நடவுச் செலவு, பயிறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள், சிறு தானியப் பயிர்கள், கரும்பு பயிர்கள், தென்னை பயிர்கள் ஆகியவற்றுக்கு நிவாரணமாக 1 லட்சத்து 62 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்களுக்கு ரூ.132 கோடியே 12 லட்சம் நிதி மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, பெரு விவசாயிகள் 2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேல் பயனடையும் இந்த நிவாரண நிதி இரண்டொரு நாட்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மத்திய அரசிடம் இருந்து பேரிடர் மேலாண்மை நிதி வரவில்லை என்றாலும், விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு மாநில நிதியில் இருந்து இந்த நிவாரண தொகையை வழங்குகிறது. பாக்ஸ்கான் தொழிற்சாலையில் இருக்கக்கூடிய பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதாக எனக்கு தகவல் வந்தவுடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கே அனுப்பி வைத்து, அந்த பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்தேன். எனது அறிவுறுத்தலின் பேரில், 23-12-2021 அன்று சென்னை தலைமை செயலகத்தில் தொழில் துறைக்கான அரசு கூடுதல் தலைமை  செயலாளர் தலைமையில், பாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர் பிரச்னைகளை தீர்க்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு கூறிய ஆலோசனைகளை தவறாமல் செயல்படுத்துவதாக பாக்ஸ்கான் நிறுவனமும் உறுதி அளித்திருக்கிறது. இதன் விளைவாக, பாக்ஸ்கான் நிறுவனம் முதற்கட்டமாக 2 விடுதிகளில் தங்கியிருக்கக்கூடிய 500 தொழிலாளர்கள் மூலம் 12-1-2022 அன்று உற்பத்தியை தொடங்க உள்ளது என்ற செய்தியும், தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்தின் மூலம் ஏறத்தாழ, 18,750 பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்கள் மற்றும் பிற நிறுவன ஊழியர்கள் தங்குவதற்கு ஏற்ப வல்லம் வடகாலில் ஒருங்கிணைந்த தங்கும் விடுதி அமைக்கப்படவுள்ளது. இந்த விடுதி ரூ.570 கோடி செலவில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 தொகுதிகளாக 11 மாடிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது. புது கட்டுமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிகளை மேற்கொண்டு, 15 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை