மழை மிரட்டுவதால் விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும்-நெல் விவசாயிகள் வலியுறுத்தல்

மேலூர் : மேலூர் சுற்று வட்டார பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்படுவதால், விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலூர் சுற்று பகுதியில் உறங்கான்பட்டி, வெள்ளலூர், தும்பைப்பட்டி, தனியாமங்கலம், கொட்டகுடி உட்பட பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கூட்டுறவு துறை மற்றும் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை கூட்டுறவு துறை மட்டுமே நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. கூட்டுறவு துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த கால தாமதத்தால் திடீர் திடீரென பெய்யும் மழையில் நெல்மணிகள் நனைந்து, முளைத்து வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகிறனர். உறங்கான்பட்டி விவசாயி ராஜேந்திரன்: ஒரு போக பாசன பகுதியான மேலூர் பகுதியில் பெரியாறு வைகை அணையின் நீர்மட்டத்தை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு வரை, அணையின் நீர்மட்டத்தை கவனித்தே விவசாய பணிகள் நடைபெற்று வந்தது. அணையில் நீர்மட்டம் குறையும் போது எல்லாம் விவசாயிகள் வயிற்றில் பயம் சுரக்கும். இந்த ஆண்டு அதற்கு எதிர்மாறாக அணையில் போதிய தண்ணீர் இருந்ததால், முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டதும் சந்தோஷமாக விவசாய பணிகளை மேற்கொண்டோம். ஆனால் தேவைக்கு அதிகமாக மழை பெய்து, இந்த ஆண்டு விவசாயத்தை பாதிக்க செய்யும் என கற்பனையில் கூட நினைக்கவில்லை. விவசாயி கண்ணதாசன் கூறியதாவது: சராசரியாக ஏக்கருக்கு 35 முதல் 40 மூடை நெல் அறுவடை செய்வது வழக்கம். இந்த ஆண்டு நெல்மணி பிடிக்கும் காலத்தில் தொடர் மழை பெய்ததால், போதிய அளவு விளைச்சல் இல்லை. 70 முதல் 80 சதவிகிதம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 மூட்டை நெல் மட்டுமே விளைந்துள்ளது. இவற்றை விற்பனை செய்ய கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒரு வாரத்திற்கு மேலாக காத்திருக்கிறோம். ஆனால் கொள்முதல் மட்டும் செய்யப்பட வில்லை. மழையினால் நெல்மணிகள் முளைத்து விடுகிறது. அப்படி வீணான நெல்மணிகளை வேறு வழியின்றி நேற்று எடுத்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது என்றார். போதிய தண்ணீர் வசதியின்றி விவசாயம் பாதிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு அதிக மழை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் விவசாயிகளுக்கு கிடைத்த கொஞ்ச நெல்மணிகளையும் கொள்முதல் செய்ய அதிகாரிகள் தாமதப்படுத்துவதால், அதுவும் தற்போதைய திடீர் மழையில் பாதிக்கப்பட்டு, முளைத்து வருகிறது. அதிகாரிகள் விவசாயிகளின் நலன் கருதி அவர்கள் கொண்டு வரும் நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்