மழை பாதிப்புகள்; தமிழகத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் : ராமதாஸ்

சென்னை : மழை பாதிப்புகள்; தமிழகத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:’தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைக் கடந்து மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும், சேதங்களை சரி செய்யவும் பெருந்தொகை தேவைப்படும் நிலையில், தமிழக அரசிடம் உள்ள பேரிடர் நிவாரணம் மற்றும் தணிப்பு நிதி அதற்கு போதுமானதாக இல்லை என்பது தான் உண்மை.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்தே மாநிலம் முழுவதும் கடுமையான மழை பெய்து வருகிறது. தொடக்கத்தில் சென்னையில், வானிலை ஆய்வு மைய வல்லுனர்களால் கூட கணிக்க முடியாத அளவுக்கு பெய்து, ஒட்டுமொத்த மாநகரத்தையும் வெள்ளக்காடாக்கிய வடகிழக்கு பருவமழை, அடுத்தக்கட்டமாக காவிரி பாசன மாவட்டங்களை நாசப்படுத்தியுள்ளது.காவிரி பாசன மாவட்டங்களின் பல இடங்களில் 24 மணி நேரத்தில் 310 மில்லி மீட்டருக்கும் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதனால் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.சென்னை மற்றும் வட மாவட்டங்களில் தொடர் மழையின் தாக்கம் குறையும் முன்பே, வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று கரையை கடக்கிறது. குறைந்த காற்றழுத்த மண்டலத்தின் தாக்கங்களையும், பாதிப்புகளையும் சென்னையும், பிற மாவட்டங்களும் நேற்றிலிருந்தே அனுபவித்து வருகின்றன.சென்னையில் ஏற்கனவே பெய்த மழையின் பாதிப்புகளே குறையாத நிலையில், புதிய மழையின் தாக்கங்கள் மிகவும் கடுமையாக இருக்கின்றன.சென்னையில் மழை – வெள்ளத்தால் பல பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுதல், வெள்ளப்பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டல், தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து மழை பாதிப்புகளால் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல், தொற்று நோய் பரவாமல் தடுத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.மழை ஓய்ந்த பின்னர் சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட ஏராளமான நிவாரணப் பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டியிருக்கிறது.புயல் மற்றும் மழை நிவாரணப் பணிகளையும், உதவிகளையும் செய்து முடிப்பதற்கு குறைந்தபட்சம் சில ஆயிரம் கோடி ரூபாயாவது தேவைப்படும். ஆனால், மழை தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் புயல் மற்றும் மழை பாதிப்புகளை உடனடியாக மதிப்பிடுவது சாத்தியமே இல்லை.பாதிப்பு மற்றும் சேத மதிப்பை கணக்கிட்டு, மத்திய அரசிடம் நிதியுதவி கோருவதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகக்கூடும். ஆனால், அதுவரை மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு தேவையான நிதி தமிழக அரசிடம் இல்லை.2021-22 ஆம் ஆண்டில் பேரிடர் மேலாண்மைக்காக, தமிழக அரசுக்கு, ரூ.1,360 கோடியை மட்டுமே பதினைந்தாவது நிதிக்குழு பரிந்துரைத்திருக்கிறது. ஆனால், கொரோனா நோய்த் தடுப்பு – சிகிச்சை உள்ளிட்ட செலவுகளுக்காக கடந்த ஜூலை மாதம் வரை மட்டுமே ரூ.8,931 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.கொரோனா பணிகளுக்காக தொடர்ந்து பெருந்தொகை செலவழிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழலில் மாநில அரசின் சுமை மற்றும் பொறுப்புகளை மத்திய அரசும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.எனவே, புயல் மற்றும் மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரக்கு மத்திய அரசு முதற்கட்டமாக குறைந்தபட்சம் ரூ.1000 கோடி நிதி வழங்க வேண்டும். மழை ஓய்ந்த பின்னர் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக அதிகாரிகள் குழுவை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும். புயல் மற்றும் மழை சேத மதிப்பீடு முடிவடைந்த பின்னர் தமிழக அரசு கோரும் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்’இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை