மழையால் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை முடங்கியது; 1 லட்சம் மூட்டை காய்கறிகள் தேக்கம்: வியாபாரிகள், விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு

சென்னை: மழையால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் வராததால் விற்பனை முடங்கியது. சுமார் 1 லட்சம் மூட்டை காய்கறிகள் தேக்கம் நிலை ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள், விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் மாண்டஸ் புயலால் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்ந்தது. மழையால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் வழக்கத்தை விட பலத்த மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்து வீட்டிலேயே முடங்கினர். அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வீட்டை வீட்டு வெளியே சென்ற காட்சியை காண முடிந்தது. இதனால், சென்னையில் நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் கூட்டத்தை காண முடியாத நிலை ஏற்பட்டது. பெயர் சொல்லும் அளவுக்கு தான் வியாபாரிகளும், பொதுமக்களும் காய்கறி வாங்க வந்திருந்தனர். இதனால், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் விற்பனை படுமந்தமாக நடந்தது. இதனால் அத்தியாவசிய காய்கறிகள் விற்பனை கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த விபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு தினசரி 500 லோடு காய்கறி வருவது வழக்கம். மழையால் 400 லோடு மட்டுமே காய்கறி வந்தது. ஆனால் தென்சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் இருந்து நேற்று வியாபாரிகள் யாரும் காய்கறிகள் வாங்க வரவில்லை. குறிப்பாக சுற்றுவட்டாரங்களான திண்டிவனம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் தக்காளி, வெண்டைக்காய், பாகற்காய், கத்தரிக்காய், சுரக்காய் போன்ற காய்கறிகள் விற்பனையாகாமல் அடியோடு தேங்கி போனது. இவை அனைத்தும் அழுகக்கூடிய பொருட்கள். இவற்றை வைத்தும் விற்க முடியாது. சுமார் 1 லட்சம் மூட்டை காய்கறி விற்பனை ஆகாமல் தேங்கி போனது. அதாவது 40 டன் அளவுக்கு காய்கறிகள் தேக்கம் நிலை ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள், விவசாயிகளுக்கு சுமார் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதே நேரத்தில் காய்கறிகள் விலை கணிசமாக குறைந்து காணப்பட்டது. பட்டாணி ரூ.80லிருந்து ரூ.40க்கும், உருளைக்கிழங்கு ரூ.30லிருந்து ரூ.22 ஆகவும், வெங்காயம் ரூ.20 என்ற அளவில் தான் விற்கப்பட்டது. காய்கறிகளின் விலை குறைந்திருந்த போதிலும் வாங்க வியாபாரிகள் வராததால் காய்கறிகள் அதிக அளவிலான தேக்கம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்