மழைநீர் வடிகால், நீர்நிலை புனரமைப்பு பணியை விரைந்து முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம்: மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறை சார்பில் 2,070 கி.மீ. நீளமுள்ள 9,224 மழைநீர் வடிகால்கள் மற்றும் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழி கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கொசஸ்தலை ஆறு, அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப்பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, வடசென்னை பகுதிக்கு உட்பட்ட கொசஸ்தலை ஆறு வடிநில பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.3,220 கோடி மதிப்பீட்டில் 769 கி.மீ. நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 46 சிப்பங்களாக  பிரிக்கப்பட்டு, பல்வேறு ஒப்பந்ததாரர்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், தரம் குறித்தும் ஆய்வு  செய்ய மாநகராட்சியின் சார்பில் கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொசஸ்தலை ஆறு வடிநில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள்  குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி  தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், கொசஸ்தலை ஆறு வடிநில பகுதிகளில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தில் இதுவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்யாத 4 ஒப்பந்ததாரர்களுக்கு காரணம் கேட்டு குறிப்பாணையும், 5 ஒப்பந்ததார்களுக்கு ரூ.1.75 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வடிவமைப்பின்படி அமைக்கப்படாமலும், தரத்தில் குறைபாடுள்ள வடிகால்களை அமைத்த ஒரு ஒப்பந்ததாரருக்கு அந்த வடிகால்களை இடித்து விட்டு, அவர்களின் சொந்த செலவில் தரமான, சரியான வடிவமைப்பில் மழைநீர் வடிகால்களை மீண்டும் அமைக்க உத்தரவிடப்பட்டது. இதேபோல், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.109.88  கோடி மதிப்பில் நடைபெறும் 47 நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ரூ.106.47 கோடி மதிப்பீட்டில் 5.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மாம்பலம் கால்வாய் கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்காத ஒரு ஒப்பந்ததாரர் மற்றும் இதுவரை பணியினை தொடங்காத 3 ஒப்பந்ததாரர்களுக்கு காரணம் கேட்டு குறிப்பாணையும் வழங்கப்பட்டது. இப்பணியில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்காத  காரணத்திற்காக ஒரு ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கூட்டத்தில் துணை ஆணையர் (பணிகள்) பிரசாந்த், தலைமைப் பொறியாளர் (பொது) ராஜேந்திரன், மேற்பார்வை  பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உட்பட பலர்  உடனிருந்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை