மழைக்கால நோய்களை தடுக்க குடிநீரை கொதிக்க வைத்து குடிக்கவும்: மாநகராட்சி பொது சுகாதாரத்துறை வேண்டுகோள்

சென்னை: சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க, குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவும். உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் சோப்பு உபயோகப்படுத்தி  முறையாக 20 நொடிகள் கைகளை நன்கு தேய்த்து கழுவவும், வீட்டிற்கு வெளியில் செல்லும் போது காலணிகளை அணிந்து செல்லவும், வீட்டிற்கு வெளியில் சென்று வந்த ஒவ்வொரு முறையும் கை, கால்களை சோப்பு தேய்த்து கழுவவும். சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை உண்பதை தவிர்க்கவும். காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெறவும், சுய சிகிச்சை செய்யக்கூடாது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு, சர்க்கரை கரைசல் மற்றும் வீட்டில் உள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருகவும், உடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.தங்கள் வீட்டிலுள்ள மேல்நிலை, கீழ்நிலை தொட்டிகளை வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்து கழுவி உலர வைத்து பயன்படுத்த வேண்டும். சுகாதாரத்தை காக்க சுற்றுப் புறத்தினை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும் புகார் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு 1913 அவசர உதவி மற்றும் சிகிச்சைக்கு மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார் பேட்டை 044-25912686-88 மற்றும் 108 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாநகராட்சி பொது சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை