மலைச் சாலையில் வரையாடுகள் நடமாட்டம்-பாதுகாக்க காவலர் நியமிக்க கோரிக்கை

வால்பாறை :  வால்பாறை பொள்ளாச்சி சாலையில் வரையாடுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தவேண்டும் என வன விலங்குகள் ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.தமிழகத்தின் மாநில விலங்கு வரையாடு ஆகும். மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் வரையாடு ஒன்றாகும். மேலும் அழிந்துவரும் இனங்களின் பட்டியலில் வரையாடு இடம்பெற்றுள்ளது.கடல் மட்டத்திலிருந்து 1,200 முதல் 2,600 மீட்டர் உயரம் உள்ள மலையில் புற்கள் அடர்ந்த சோலைப் புல்வெளி பகுதியில் வசிக்கும் வரையாடுகள், பாறைகளில் முளைத்துள்ள புற்களையும், தாவர இலைகளையும் உண்ணும்.முதிர்ந்த ஆண் வரையாடு சராசரியாக 100 கிலோ எடை இருக்கும். பெண் வரையாடு சராசரியாக 50 கிலோ  இருக்கும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் வரையாடுகள் இனப்பெருக்கம் காலம் ஆகும். எனவே இனப்பெருக்க காலம் தொடங்கி உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் 5 சதவிகித இடங்களில் பரவியுள்ள வரையாடுகள் தமிழகத்திலும் கேரளாவிலும் மட்டுமே வாழ்கின்றன.வால்பாறை பகுதியில் அக்காமலை, வரையாட்டு மலை பகுதியில் வாழும் வரையாடுகளை, வால்பாறைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இடையூறு செய்வதால் வன ஆர்வலர்கள் கவலையடைந்து உள்ளனர்.ஆழியாரில் இருந்து வால்பாறைக்கு வரும் மலைப்பாதையில் வரையாட்டுப்பாறை பகுதியில் தமிழக மாநில விலங்கான வரையாடுகள் உள்ளன. தற்போது நிலவும் சாரல் மழையால் சாலையோரம் முளைத்த புதிய புல்களை மேய்ந்த வண்ணம் உள்ளது. சிறப்புவாய்ந்த விலங்கை தொட்டு பார்ப்பதும், உணவு கொடுக்க முயல்வதால் வரையாடுகள் பயந்து சாலையில் ஓடுகிறது. இந்நிலையில் நேற்று காலை சிறிது நேரம் போக்குவரத்தை மலைப்பாதையில் வரையாடுகள் நிறுத்திவிட்டன. மேலும் வாகன போக்குவரத்து உள்ள நிலையில் வாகனங்கள் மோதும் சூழல் ஏற்பட்டுவருகிறது. எனவே தமிழக மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாக்க வனத்துறையினர் தினமும் காவலர்களை நியமிக்கவேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்….

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு