மலேரியா, டெங்கு தடுப்பு பணி மழைநீர் தேங்கிய 400 கிலோ டயர்கள் பறிமுதல்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

 

திண்டுக்கல், செப். 24: திண்டுக்கல்லில் மலேரியா டெங்கு காய்ச்சல்களை தடுக்கும் விதமாக மழைநீர் தேங்கியுள்ள டயர்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வழிகாட்டுதலின் படி மலேரியா டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மலேரியா டெங்கு தடுப்பு பணியாக வீடுகள் தோறும் தேங்கியுள்ள தண்ணீரில் மருந்து தெளித்து கொசு புழு ஒழிக்கும் பணி வார்டுகள் தோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று மாநகர நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், கீதா, சீனிவாசன், முகமது ஹனிபா, கேசவன் மற்றும் மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் இணைந்து திண்டுக்கல் பழநி சாலையில் உள்ள பழைய டயர்கள் விற்பனை கடைகளில் சோதனை செய்தனர். அதில் மழைநீர் தேங்கியுள்ள டயர்களை பறிமுதல் செய்யும் பணி நடைபெற்றது. அதில் 400 கிலோ எடை கொண்ட 20 ஆயிரம் மதிப்பிலான டயர்களை பறிமுதல் செய்தனர். மேலும் மீண்டும் இது போன்று மழை நீர் டயர்களில் தேங்கியிருந்தால் டயர்களை பறிமுதல் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பழைய டயர் விற்பனையாளர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்