மலேசியாவில் போதைப் பொருள் கும்பலிடம் விற்கப்பட்ட மகனை மீட்டுத் தரக் கோரி தாய் கண்ணீர் மல்க மனு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்களான கண்ணன்- முத்து தம்பதியினரின் 3வது மகன் தான் 21 வயது ஆனந்த். டிப்ளமோ படித்துள்ள அவர், குடும்ப வறுமை காரணமாக மலேசியாவுக்கு கோவில் வேலைக்குச் செல்ல முன் வந்தார். கோட்டையூரைச் சேர்ந்த ஏஜெண்ட் ஒருவர் 80,000 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு கடந்த 2020 மார்ச் மாதம் ஆனந்தை மலேசியாவிற்கு அனுப்பினார். அங்கு வேலையில் சேர்ந்த ஆனந்திற்கு முதல் மாதம் மட்டும் சம்பளம் கிடைத்தது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை. அதனால் கவலையில் ஆழ்ந்திருந்த குடும்பத்தினருக்கு ஆனந்திடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில் மலேசியாவில் உள்ள ஏஜெண்ட் தன்னை போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்து விட்டதாகவும், அவர்கள் வீட்டில் அடைத்து வைத்த தம்மை சித்திரவதை செய்ததாகவும், மலேசியாவில்  உள்ள சிலாங்ப்பூர் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் தம்மை மீட்டதாகவும் கூறியிருந்தார். தற்போதைய தமது நிலை குறித்து பேசிய வீடியோ ஒன்றையும் ஆனந்த் அனுப்பியுள்ளார். மலேசியா போலீசாரால் மீட்கப்பட்ட ஆனந்த் தற்போது அங்குள்ள காப்பகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளார். தம்மை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் அனுப்பியுள்ள வீடியோவில் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து தமது மகனை மீட்டுத் தரக்கோரி ஆனந்தின் பெற்றோர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர். மலேசியாவில் சிக்கித் தவிக்கும் ஆனந்தை மீட்கக்கோரும் அவரது பெற்றோர் மனு தமிழகஅரசின், மேல் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வேலை என்ற ஆசையில் போலி ஏஜெண்டுகள் மூலம் செல்வோர் ஏமாற்றப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே உரிய அரசு அமைப்புகள் மூலம் பணிக்குச் செல்வதே பாதுகாப்பானது என காவல் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஆனந்தை மலேசியாவிற்கு அனுப்பிய ஏஜெண்டை பிடித்தால் போதைப் பொருள் கடத்தல் கும்பலில் பின்னணி வெளியாக வாய்ப்பு இருப்பதால் அது தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது.  …

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்