மலர் கண்காட்சி நெருங்கிய நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அரங்குகள் அமைக்கும் பணி துவங்கியது

ஊட்டி: மலர் கண்காட்சி நெருங்கிய நிலையில், தாவரவியல் பூங்காவில் பிரமாண்ட மேடை மற்றும் அரங்குகள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது. இதில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை காண பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூங்கா பொலிவுப்படுத்தப்படும்.அதேபோல், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களை மகிழ்விக்கும் பொருட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. மேலும், விழாவை துவக்கி வைக்க அமைச்சர்கள், மாநில முதல்வர் அல்லது கவர்னர் வருவது வழக்கம். இம்முறை இம்மாதம் 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை ஐந்து நாட்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடக்கிறது. இதை துவக்கிவைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார். இந்நிலையில், பூங்காவில் கடந்த ஆண்டுகளை காட்டிலும் இம்முறை பிரமாண்ட மேடை, அரங்குகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. பொதுவாக, இப்பணிகள் ஒரு வாரத்திற்கு முன்னரே துவங்கும். ஆனால், இம்முறை தமிழக முதல்வர் வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மேடை அமைப்பு ஆகியவை குறித்த தகவல்கள் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, சற்று முன்னதாகவே மேடை மற்றும் அரங்குகள் அமைக்கும் பணியில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பூங்காவை பொலிவுப்படுத்தும் பணியிலும் ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்….

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலராக முனைவர் வின்சென்ட் நியமனம்!

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை 16 முதல் மீண்டும் துவக்கம்: டிக்கெட் முன்பதிவு இன்று நள்ளிரவு ஆரம்பம்