Wednesday, July 3, 2024
Home » மர வழிபாட்டின் வேர்களைத் தேடி…

மர வழிபாட்டின் வேர்களைத் தேடி…

by kannappan
Published: Last Updated on

சென்ற இதழ் தொடர்ச்சி…மரங்களுக்கு உயிர் இருப்பதால் அவை அழும் ஒலி பல மைல்களுக்கு கேட்கும் எனும் நம்பிக்கையும் இங்கு உண்டு. ஒரு முறை அரவிந்தர் ஆசிரமத்தை சேர்ந்த  அன்னை இரவில் ஒரு மரம் அழும் ஒலி கேட்பதாக சொல்லியபடி எழுந்து வந்து பார்த்த போது அங்கு ஒரு மரத்தில் ஒரு கோடரி அப்படியே வெட்டி  வைக்கப்பட்டு இருந்தது. அதை அவர் எடுத்து தரையில் போட்டார். பின்பு மரத்தின் அழுகை கேட்கவில்லை என்றார். மரம் வெட்டுபவர்கள் அந்த மரத்தை வணங்கி அதனிடம் உத்தரவு பெற்று தான் வெட்டுவர். இப்பழக்கம் அந்தக் காலத்தில் மட்டுமல்ல இப்போதும் உண்டு.  ரஷ்யாவில் ஒரு பகுதியில் மரத்தை வெட்டுவதற்கு முன்பு ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை தெளித்து மர தேவதையை சாந்தப்படுத்துவர். ரோம் நாட்டில் மரம்  வெட்டும் விவசாயி பன்றியை வெட்டி அதன் ரத்தத்தைக் கொண்டு அடி மரத்தை மெழுகுவர். பிறகு வணங்கி உத்தரவு பெற்று வெட்டுவர். ஸ்வீடன் நாட்டின்  பழைய தலைநகரமான உப்சாலாவில் மிகப் பெரிய புனித வனம் ஒன்று வழிபாட்டுக்குரியதாகப் போற்றப்பட்டு வந்தது. நம் தேசத்தில் கடம்ப வனம், தில்லை வனம் என்றிருப்பதை போல அங்கும் ஒரே மரம் அடர்ந்து காணப்படும் வனங்களும் இருந்தன. இவ்வனத்தில் உள்ள  ஒவ்வொரு மரமும் தெய்வ சக்தி உடையவை ஆகும். அங்குள்ள எந்த மரத்தையும் மனிதர்கள் வெட்டுவதோ காய் கனிகளை புசிப்பதோ கிடையாது. அவ்வாறு  செய்வது அம்மரத்தை எச்சில் படுத்தியதற்கு சமம் ஆகும். எனவே அதன் புனிதத்தை காப்பாற்றும் வாக்கியில் மரங்களை பாதுகாப்பது மரபு. இதை நம் சங்க  இலக்கிய நன்னன் கதையுடன் ஒப்பு நோக்கலாம். செல்த்தியர்கள் ஓக் [oak] மரங்களை தெய்வீக மரமாக கருதி வழிபட்டனர்.மரங்களை வழிபாட்டு வந்த லித்துவேநியர்கள் (Lithuanian: Lietuvos Respublika, வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு) பதினான்காம்  நுற்றாண்டு வரை இப்பழக்கத்தை பின்பற்றினர். பின்னர் இவர்களும் கிறிஸ்துவத்துக்கு மாற்றப்பட்டதால் பழைய நம்பிக்கைகளையும் மரபுகளையும் கைவிட்டனர்.   ரோமர்களின் தலைவனான ரோமுலஸ் நினைவாக அத்தி மரம் அங்கு வழிபாடு பொருளாக இருந்தது. பாலதின் மலையில் வளர்ந்த கார்நெல் [cornel] மரம்  ரோமர்களின் புனித மரமாக கருதப்பட்டது. இந்த மரம் வாடியிருப்பதை வழிப்போக்கர் கவனித்தால் உடனே பெரிய கூப்பாடு போடுவர்; .அதைக் கேட்ட அருகில் இருக்கும் கிராமத்தார் வாளிகளில் நிறைய  தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி மரத்தை செழிக்க செய்வர். மரம் வாடினால் மக்கள் வாழ்வும் வாடி விடும் என்பது அவர்களின் நம்பிக்கை. கிழக்கு ஆப்பிரிக்காவில்  வாழ்ந்து வந்த வாணிக்கா இனத்தவர் தென்னை மரத்தை தமது தெய்வமாகக் கருதினர். அதனை அம்மா என்றே அழைத்தனர். நாம் தென்னம் பிள்ளை என்று  பிள்ளையாக கருதுகிறோம் ஆப்பிரிக்கர்கள் அதை அன்னையாகக் கருதினர். தென்னை மரத்தை வெட்டி சாய்ப்பது அன்னையைக் கொன்ற பாவத்துக்கு நிகரானதாகும் என்று வாணிக்கா இனத்தை சேர்ந்த ஆப்பிரிக்கர் நம்பினர். மரங்களுக்கு  உயிர் இருக்கிறது. அதனை ஒடிப்பதும் உடைப்பதும் அதன் பிஞ்சு கைகளை முறிப்பதற்குச் சமம் ஆகும் என்று புத்த சமயத்தவர்கள் பிரச்சாரம் செய்து மரம், செடி  கொடிகளை அழிவில் இருந்து காப்பாற்றினர். பௌத்தம் செல்வாக்கு பெற்றிருந்த கேரளத்தில் இன்றும் மரங்களில் உறைந்திருக்கும் தேவதையை யட்சி என  அழைத்து அதனைக் கண்டு பயந்து அஞ்சி ஓடும் நிலையும் உள்ளது. அஸ்ஸாம் காடுகளில் வசிப்போர் தங்களின் குழந்தை தொலைந்து விட்டது என்றால் மரத்தில் உறையும் தெய்வங்கள் கவர்ந்து சென்று விட்டன என்று நம்புவர்.  அதனால் குழந்தை கிடைக்கும்வரை மரத்தின் கிளைகளை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி பின்னப்படுத்துவர். அப்போதுதான் அந்த மரத்தில் இருக்கும் தெய்வம்  தமது குழந்தையை கொண்டு வந்து திருப்பி தரும் என்று தண்டிப்பர். மரங்களில் உறைந்திருப்பதாக நம்பப்பட்ட தெய்வம் பெரும்பாலும் பெண் தெய்வமாகவே  இருப்பதுண்டு. இதில் மக்களுக்கு நல்லது செய்யும் தெய்வங்களும் உண்டு. சில மரங்களில் துஷ்ட தெய்வங்கள் உறைந்திருப்பதும் உண்டு என இந்த மரவழிபாட்டின் நம்பிக்கை காலப்போக்கில் பெரியளவில் கிளை விட்டு வளர்ந்தது.  காங்கோ இனத்து மக்கள் மரங்களின் கீழ் நம் மக்களைப்போல படையலிட்டு வணங்குவர் அப்போது மதுக் குடங்களை மரத்தடியில் வைத்து விடுவர். மரங்கள்  தாகம் எடுக்கும்போது இந்த மதுவை குடித்து தாகம் தீர்க்கும் என்று நம்பினர். ஆஸ்திரேலியாவிலும் பிலிப்பைன்ஸ் தீவுகளிலும் தங்களின் முன்னோர் மரங்களாக  உருவெடுத்திருப்பதாக நம்பி வணங்கி வந்தனர். தமது அப்பா தாத்தா ஆகியோர் இந்த மரமாக உருவெடுத்து வந்திருப்பதாக நம்பினர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் இயற்கை சார்ந்து வாழ்ந்த வாழ்க்கையும் அவற்றின் ஆதரவு வேண்டும் என்று நம்பிய நம்vபிக்கையும் எனலாம். ஜப்பானிலும்  இந்த நம்பிக்கை உண்டு. மரங்கள் அடர்ந்த பகுதி தெய்வாம்சம் கொண்டதாக நம்பப்பட்டு வந்ததால் அங்குள்ள புனித மரத்தின்கீழ் இருந்து நம்ம ஊர் பஞ்சாயத்து  தீர்ப்பது போல அங்கும் சண்டை சச்சரவுகளை தீர்த்து வைக்கும் பழக்கம் இருந்தது. பிறருக்கு தர்மமாக கொடுக்க விரும்பும் பொருட்களை இம்மரத்தடியில் வைத்து  செல்வது உண்டு. தான் இந்த மரத்தடியில் வைத்து எடுத்துச் சென்றால் அந்தப் பொருளுக்கும் உயிருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கையும்  இருந்தது. இந்த தெய்வீக மரத்தினடியில் தெய்வத்திற்குப் பலி கொடுக்கப்பட்டன சில சடங்குகள் நிறைவேற்றப்பட்டன ஏனென்றால் இந்த மரத்தில் தெய்வம்  உறைந்திருப்பதாக நம்பிக்கை இருந்ததால் மரங்களின் கீழ் இன்றைக்கு தெய்வ சந்நிதானத்தில் நடக்கும் சடங்குகள் அனைத்தும் நடைபெற்றன. ஜப்பான் நாட்டில்  சகுரா எனப்படும் செர்ரி மரத்தின் கீழ் முற்காலத்தில் இறந்தவர்களை புதைத்தனர். அவ்வாறு புதைக்கப்பட்ட அவர்கள் தங்களுடைய வம்சத்தினருக்கு மலர்களாக  வந்து ஆசி வழங்குவதாக ஒரு நம்பிக்கையும் இருந்தது. எனவே, இந்தச் செடி மரங்கள் பூக்கும் காலங்களில் அந்த மரத்தினடியில் தங்களின் முன்னோர்களைப் புதைத்தவர்கள் அந்த மரத்தடியில் வந்து உட்கார்ந்து அந்த  மலர்கள் தங்கள் மீது உதிரும்போது முன்னோர்களின் ஆசி கிடைத்ததாக நம்பி மகிழ்ந்து வீடு திரும்புவது உண்டு. இப்பழக்கம் இன்றைக்கு மரத்தின் அடியில்  யாரையும் புதைக்கவில்லை என்றாலும் மலர்கள் தம்மீது பொழிவதை மகிழ்ச்சியாகக் கருதும் போக்கு நீடித்து வருகிறது. இதனை மலர் காணுதல் [flower  viewing] என்பர். பிளம்ஸ் மரங்களின் நிழலிலும் இவ்வாறு மக்கள் கூடும் பழக்கம் உண்டு. உமே எனப்படும் பிளம்ஸ் மரங்களின் அடியிலும் மக்கள் கூட்டம்  கூட்டமாக வந்து அமர்ந்து ஒரு நாள் முழுக்க செலவழிக்கின்றனர். வேர்களைத் தேடுவோம் தொகுப்பு: முனைவர் செ. ராஜேஸ்வரி

You may also like

Leave a Comment

sixteen − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi