மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடான 50% இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் வருகிறதா? ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழக இட ஒதுக்கீட்டு சட்டப்படி 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம், ஒன்றிய அரசு ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு வருகிறதா என்று விளக்கமளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஒன்றிய அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு ஏதுவும் நடைபெறவில்லை என்றார்.  அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை. தமிழக அரசின் இட ஒதுக்கீடை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யவே குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. ஒன்றிய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழக அரசு கொண்டுவந்துள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை ஒதுக்க வேண்டும். தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை புறக்கணிக்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் ஒன்றிய அரசின் குழுவும், உச்ச நீதிமன்றமும் அதை அங்கீகரித்துள்ளன என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது மொத்த இட ஒதுக்கீடான 50 சதவீதத்துக்குள் வருகிறதா, இல்லையா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, ஒன்றிய அரசு பதில் தர உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை