மருத்துவ சிகிச்சைக்கு தாம்பரம், கூடுவாஞ்சேரி செல்வதை தவிர்க்க மண்ணிவாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ வரலட்சுமி வலியுறுத்தல்

சென்னை: மருத்துவ சிகிச்சைக்கு தாம்பரம், கூடுவாஞ்சேரி செல்வதை தவிர்க்க மண்ணிவாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் வலியுறுத்தி பேசினார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது துணை கேள்வி எழுப்பி செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் (திமுக) பேசியதாவது. செங்கல்பட்டு தொகுதியில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள மண்ணிவாக்கம் ஊராட்சியில் கிட்டத்தட்ட 20,000 மக்கள் வசிக்கின்றனர். அந்த இடத்தில் இருந்து மக்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்தால், தாம்பரம் அல்லது கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டிய நிலையாக இருக்கிறது. எனவே, அந்த மண்ணிவாக்கத்திலேயே ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்என்றார்.இதற்கு பதில் அளித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், நான் தொடக்கத்திலேயே சொல்லியிருக்கிறேன். ஒன்றிய அரசின் வரையறையில் 30,000 பொதுமக்கள் இருக்க வேண்டும். ஒரு ஆரம்ப சுகாதரா நிலையத்தில் இருந்து மற்றொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 6 கிமீ இடைவெளி இருக்க வேண்டும். இந்த இரண்டும் பொருந்தி வருமானால், நிச்சயம் அங்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்