மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளரை வெட்டி ரூ.20.22 லட்சம் ஹவாலா பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது: சொந்த பணம் என புகார் அளித்த நபரும் சிக்கினார்

சென்னை: சென்னை அண்ணாசாலையில் மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளரை அரிவாளால் வெட்டி ரூ.20.22 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 4 பேரை, சிசிடிவி பதிவு உதவியுடன் போலீசார் கைது செய்தனர். மேலும், இதை சொந்த பணம் என்று புகார் அளித்த நபரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (27). பிடெக் மற்றும் பயோடெக் பட்டதாரியான இவர், சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். மேலும், சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் எதிரே உள்ள லாட்ஜில் தங்கியுள்ளார். கடந்த மாதம் 27ம் தேதி இரவு ராயப்பேட்டை பி.எம் தெருவில் உள்ள நண்பர் வினோத்தை பார்க்க சிவபாலன் ₹20.22 லட்சத்துடன் தனது பைக்கில் சென்றுள்ளார். அண்ணா சாலை எஸ்பிஐ வங்கி அருகே சென்றபோது, 3 பைக்கில் வந்த 6 பேர், இவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு ₹20.22 லட்சத்தை பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாக, ரத்த காயங்களுடன் அண்ணாசாலை காவல் நிலையத்தில் சிவபாலன் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்திய போது, 6 பேர் கொண்ட கும்பல் சிவபாலனை வெட்டிவிட்டு பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. மேலும், சிவபாலன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு இந்த வழக்கு தொடர்பாக சிவபாலனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வழிப்பறி செய்யப்பட்ட ₹20.22 லட்சம் தான் தனியாக மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடை தொடங்க முடிவு செய்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ₹20 லட்சம் வாங்கி வந்தாகவும், மீதமுள்ள ₹22 ஆயிரம் தான் வைத்திருந்ததாக கூறி உள்ளார். ஆனால் பணத்திற்கான வரவு குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சிவபாலனிடம் தங்களது பாணியில் விசாரணை நடத்திய போது, பாரிமுனையில் இருந்து ஒரு நபரிடம் வாங்கி வந்த ஹவாலா பணம் என தெரியந்தது. ஹவாலா பணம் என்பதால் இதுகுறித்து தெரிந்த நபர்கள் பின்தொடர்ந்து சிவபாலனை அரிவாளால் வெட்டி பணத்தை பறித்து சென்றதும் விசாரணையின் மூலம் உறுதியானது. அதைதொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதில், சிவபாலனிடம் பணத்தை பறித்த பூந்தமல்லியை சேர்ந்த ராஜேஷ், கே.ேக.நகரை சேர்நத் ஷேக் இஸ்மாயில் உள்பட 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். வழிப்பறி செய்த ₹20.22 லட்சம் குறித்தும், கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஹவாலா பணத்தை தன்னுடைய பணம் என்று பொய் புகார் அளித்த சிவபாலனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

மூதாட்டி வீட்டில் நகை திருடிய 4 பேர் கைது

சித்தாமூர் அருகே 420 கிலோ குட்கா பறிமுதல் : இருவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை