மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்திய போலி மருத்துவர் பிடிபட்டார்

பல்லாவரம், செப்.6: குன்றத்தூரில் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குன்றத்தூர், மேத்தா நகர் 2வது மேற்கு தெருவை சேர்ந்தவர் கலீல் (78). குன்றத்தூர், மேட்டு தெருவில் கிளினிக் வைத்து, கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். இவர், மருத்துவம் படிக்காமலேயே வைத்தியம் பார்த்து வருவதாக மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் அந்த கிளினிக்கிற்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவம் படிக்காமலேயே கலீல், பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அவரை மருத்துவத்துறை அதிகாரிகள், குன்றத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், பல்லாவரத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் சுமார் 10 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த கலீல், நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்து, மாத்திரைகள் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டார். மேலும், கிளினிக் வைத்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் அங்கிருந்து விலகிய அவர், குன்றத்தூரில் தனியாக அறை எடுத்து அதில் கிளினிக் நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், அவரது கிளினிக்கில் இருந்து ஏராளமான ஆங்கில மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி