மருத்துவத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தும் முதல்வர்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேச்சு

 

காரைக்குடி, செப். 23: காரைக்குடி அருகே மானகிரி அப்பலோ மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் நடமாடும் முழு உடல் பரிசோதனை வாகனம் துவக்கவிழா நடந்தது. அப்பலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி செல்வகுமாரி லாவண்யா வரவேற்றார். அப்பலோ ரீச் மருத்துவமனை மதுரை கிளஸ்டர் முதன்மை நிர்வாக உயர் அதிகாரி நீலகண்ணன் தலைமை வகித்தார். புற்று நோய் பிரிவு மற்றும் உடல்பரிசோதனை வாகனத்தை துவக்கிவைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: தமிழ்நாட்டில் சுகாதாரம், மருத்துவம், கல்வி துறைகள் மீது முதல்வர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

இப்பகுதியில் அப்பலோ மருத்துவமனை சார்பில் மேலும் பல வசதிகளை செய்துள்ளது வரவேற்ககூடியது. பொதுமக்களின் வசதிக்காக முழுமையான உடல் பரிசோதனை செய்ய தற்போது நடமாடும் வாகனத்தை அப்பல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல் புற்றுநோய்க்கு மூன்று வகை சிகிச்சை வழங்கும் வகையில், புதிய பிரிவினை துவங்கியுள்ளது பாராட்டக்கூடியது. நம்மை பாதுகாக்கும் மகத்தான பொறுப்பை மருத்துவர்கள் செய்கின்றனர். பிற மாநிலங்கள், மேலைநாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு மருத்துவ சிகிச்சை பெற பலரும் வருகின்றனர்.

பிறமாநிலங்களை விட தரமான மருத்துவம் தமிழ்நாட்டில் வழங்கப்படுவதுடன், செலவும் குறைவாகவே உள்ளது. முதல்வரின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் இம்மருத்துவமனை செயல்படுவது பாராட்டக்கூடியது. இவ்வாறு கூறினார். விழாவில் அப்பல்லோ மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கோகுலகிருஷ்ணன், புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் தீனதயாளன், புற்றுநோய் சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் பாலுமகேந்திரா, புற்றுநோய் சிறப்பு கதிர்வீச்சு மருத்துவர் சதீஷ் சீனிவாசன், டாக்டர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை