மரக்காணம் பகுதியில் தொடர் வழிப்பறி: குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது

 

மரக்காணம், செப். 24: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆட்சிக்காடு பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பினர். அதேபோல், மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தனது கணவருடன் பைக்கில் வந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி செயினை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்த புகார்களின்பேரில், மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், மணிமாறன் மற்றும் போலீசார் மரக்காணம் அருகே அனுமந்தை பகுதியில் உள்ள சுங்க சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது புதுவையில் இருந்து மரக்காணம் நோக்கி ஒரு சொகுசு காரை நிறுத்தி அதில் வந்த நபர்களிடம் விசாரித்துள்ளனர். காரில் இருந்த நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், மரக்காணம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்(19), யோகேஷ்(19), மேகநாதன்(19), அஜித்குமார்(21), ஷேக் அப்துல்லா(19), சாந்தகுமார்(21), யோகேஸ்வரன்(24) ஆகியோர் என்பதும், புதுவை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து காரில் வந்த 7 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து, சொகுசு கார் மற்றும் 7 பவுன் உருக்கிய தங்க கட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து ஷேக் அப்துல்லா, தனுஷ், யோகேஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட எஸ்பி சசாங் சாய், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பழனி உத்தரவிட்டார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு