மரக்காணம் கூனிமேட்டை சேர்ந்தவர் டீக்கடை உரிமையாளரை அடித்துக் கொன்று புதுவை மார்க்கெட் கமிட்டியில் பிணம் வீச்சு

புதுச்சேரி : மரக்காணம் கூனிமேட்டை சேர்ந்த டீக்கடை வியாபாரியை அடித்துக்  கொன்று புதுச்சேரி, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே  பிணத்தை வீசிச் சென்ற மர்ம கும்பலை தனிப்படை வலைவீசி தேடி வருகிறது. இவர்  லட்சக்கணக்கில் கடன் வாங்கியதால் கடன் கொடுத்தவர்கள் தீர்த்துக்  கட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இதை  ஒட்டிய நெல் உள்ளிட்ட விளைபொருள் மூட்டைகளை வைப்பதற்கான 2 குடோன்கள் உள்ளன.  இதில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடோனுக்கு இடதுபுறமுள்ள பகுதியில் நேற்று  காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மர்மமான முறையில் இறந்து  கிடந்தார். கருப்பு நிற டி-சார்ட்டும், சாம்பல் நிற பனியன் துணியிலான  பேண்டும் அணிந்திருந்தார். தாடியுடன் காணப்பட்ட அந்த வாலிபரின்  சடலத்தைப்பார்த்த விவசாயிகள், பொதுமக்கள் உடனே கோரிமேடு காவல்துறைக்கு  தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ  கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக  கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அவரது  வலதுகாலின் குதிகால் பகுதியில் காயத்திற்கான கட்டுக் கட்டப்பட்டிருந்த  நிலையில் பனியனை விலக்கி பார்த்தபோது உடம்பில் ஆங்காங்கே ரத்தக்கறை  தழும்புங்கள் இருந்தன. இதனால் போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து  கோரிமேடு காவல் சரகத்திற்குட்பட்ட சில ரவுடிகளையும், பொதுமக்கள் சிலரையும்  அழைத்து போலீசார் இறந்த நபர் குறித்து விசாரித்தனர்.மேலும் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், 2  தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதலில் இறந்த நபரை  அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில் துப்பு துலங்கியது.   இறந்து கிடந்த வாலிபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கூனிமேடு பகுதியை  சேர்ந்த அப்துல் ரசாக் மகன் ஷேக் சுல்தான் (29) என்பதும், திருமணமான இவர்  அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்த நிலையில், சிலருடன் அவருக்கு பணம்  கொடுக்கல், வாங்கல் இருந்ததும் தெரியவந்தது. அவர் சுமார் 40 லட்சம் வரை  பலரிடம் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்க வில்லையாம். இதனால் கடன்காரர்கள்  அவரை அவ்வப்போது அழைத்துசென்று பணத்தை கேட்டு மிரட்டி தாக்குவது உண்டாம்.  எனவே இதன் எதிரொலியாக அவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று அடித்துக் கொலை  செய்து பிணத்தை புதுச்சேரி, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்  அருகே வீசிவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. மேலும் இவர் புதுச்சேரியை  சேர்ந்த ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து அவரை கைவிட்டு விட்டாராம். எனவே  பெண்ணின் தரப்பினர் யாராவது அவரை கொலை செய்து பிணத்தை வீசிச் சென்றார்களா?  என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கையில்  காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக கோரிமேடு போலீசார்  மரக்காணம் காவல்துறையுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஷேக்  சுல்தானுக்கு யாருடன் பணம் கொடுக்கல், வாங்கல் குறித்த பிரச்னை இருந்தது  என்பது குறித்த விபரங்களை சேகரித்த தனிப்படை அந்த நபர்களை வலைவீசி தேடி  வருகிறது. கொலையாளிகள் பிடிபட்ட பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று  காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுச்சேரி மார்க்கெட் கமிட்டி  வளாகத்தில் மரக்காணம் பகுதி டீக்கடை உரிமையாளர் அடித்துக் கொலை  செய்யப்பட்டு பிணம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பைனான்சியர் கும்பலிடம் தனிப்படை கிடுக்கிப்பிடிபுதுச்சேரி தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டியில் ஷேக் திப்பு சுல்தான்  கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில்  சம்பவம் நடந்திருப்பது அம்பலமானது. இதுதொடர்பாக மரக்காணம் போலீசாருடன்  இணைந்து விசாரணையை தீவிரப்படுத்திய கோரிமேடு போலீசார், புதுச்சேரியைச்  சேர்ந்த பைனான்சியர் சிவா, மூலகுளம் தெஸ்தான், குருமாம்பேட் ராஜேஷ்  உள்ளிட்ட சிலரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுதவிர மேலும் 4 பேரை சிறப்பு அதிரடிப்படை காவல்துறையும் பிடித்து தனியாக  வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இதில் துப்பு துலங்கிய பிறகு  உரிய ஆவணங்கள் சிக்கியதும் அடுத்த கட்டமாக கைது நடவடிக்கை இருக்கும் என்று  காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே கொலை செய்யப்பட்ட ஷேக் திப்பு  சுல்தானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம்  ஒப்படைப்பதற்கான நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்….

Related posts

திருச்சி ஏர்போர்ட் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏட்டுவை வெட்டி தப்ப முயன்றபோது அதிரடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை: 4 பேர் கைது