மரக்காணம் அருகே பரபரப்பு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட நெல் நாற்று பயிரை சாப்பிட்ட மாடு சாவு

மரக்காணம், ஜூன் 1: மரக்காணம் அருகே பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட நெல் நாற்று பயிரை சாப்பிட்ட மாடு இறந்தது. மேலும் 9 மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சிக்குட்பட்ட காணிமேடு பகுதியில் உள்ளவர்கள் விவசாயத்துக்கு அடுத்தப்படியாக மாடு, ஆடு போன்ற கால்நடைகள் வளர்ப்பில் வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காணிமேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி ரமேஷுக்கு சொந்தமான 4 பசு மாடுகள், வேலுக்கு சொந்தமான 3 பசு மாடுகள், விவசாயி நாகராஜுக்கு சொந்தமான 3 பசு மாடுகள் வழக்கம்போல் கிராமத்தின் அருகில் உள்ள விவசாய நிலப் பகுதிக்கு மேச்சலுக்கு சென்றுள்ளது.

பின்னர் மீண்டும் மாடுகள் வீடுகளுக்கு திரும்பி உள்ளது. இதில் நேற்று முன்தின இரவு ரமேஷுக்கு சொந்தமான ஒரு மாடு திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. மற்ற 9 மாடுகளும் மயங்கி விழுந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியான மாடுகளின் உரிமையாளர்கள் மரக்காணத்தில் உள்ள கால்நடைத்துறை மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று கால்நடை துறை மருத்துவ குழுவினர் காணிமேடு கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற வயல்வெளிக்கு சென்று அங்கு இருந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது கந்தாடு கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் மற்றும் ஏழுமலை ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் நடவுக்கு தயார் நிலையில் இருந்த நாற்றுக்கு கடந்த 29ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துள்ளனர். இந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட நெல் நாற்றுக்களை மேய்ந்ததால் மாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மயக்க நிலையில் உள்ள மாடுகளுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்