மயிலாடும்பாறை அருகே கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி மீட்பு

வருசநாடு, செப். 28: தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே வெம்பூர் கிராமத்தில் மேகமலை மலைப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரவில் உணவு மற்றும் குடிநீர் தேடி பன்றிகள் கூட்டம் வெம்பூர் மலையடிவாரத்தில் உள்ள தோட்ட பகுதிக்குள் புகுந்தது. அப்போது சுமார் 3 வயதுள்ள ஆண் பன்றி தனியார் தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த கிணற்றில் 30 அடிவரை நீர் இருந்த காரணத்தால் பன்றிக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஆனால் படிக்கட்டு இல்லாத காரணத்தால் பன்றி கிணற்றிலிருந்து மேலே வர முடியாமல் நீரில் மிதந்து கொண்டிருந்தது. நேற்று முன் தினம் அந்தப் பகுதிக்கு வந்த விவசாயிகள் இதைப் பார்த்து கண்டமனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கண்டமனூர் வனச்சரகர் திருமுருகன் தலைமையில் வனவர், வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டுப்பன்றியை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் 30 அடி வரை நீர் இருந்த காரணத்தால் காட்டுப்பன்றியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மயிலாடும்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி வலை மூலம் காட்டுப்பன்றியை கிணற்றிலிருந்து உயிருடன் மீட்டு மேலே கொண்டுவந்தனர். மீட்கப்பட்ட பன்றிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அதே பகுதியில் உள்ள மலைப்பகுதியில் விடப்பட்டது.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்