மன அழுத்தத்தில் இருந்து விடுபட குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள் போலீசாருக்கு, டிஜிபி அறிவுரை

திருச்சி, ஜூலை.9: மன அழுத்தத்தை குறைக்க குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள் என நேற்று திருச்சி வந்த தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் மன அழுத்தம் காரணமாக நேற்றுமுன்தினம் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார். டிஐஜி விஜயகுமாரின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் அவருக்கு இறுதி சடங்குகள் நடந்தன. இதில் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டார்.

இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு விட்டு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் மதுரை சென்றுவிட்டு நேற்று திருச்சி வந்தார். திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருச்சி சரக போலீஸ் உயர் அதிகாரிகளான மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா, திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருச்சி எஸ்பி சுஜித்குமார் உள்பட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் டிஜிபி பேசியதாவது: போலீசார் பணியின் போது மன அழுத்தம் இன்றி பணியாற்ற வேண்டும். பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுப்பதுடன், பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உரிய காரணங்களோடு விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் போலீசாருக்கு விடுப்பு வழங்க வேண்டும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போலீசாருக்கு மன அழுத்தம் இல்லாதவாறு துறை சார்பாக புத்தாக்க நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், போலீசார் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தங்கள் குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட வேண்டியது மிக அவசியம் என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை