மனைவி, குழந்தையை வீட்டிற்கு அனுப்பாததால் மாமியாரை செங்கல்லால் தாக்கிய மருமகன் கைது

செய்யாறு, டிச.21: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, மாங்கால் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் அஜித் குமார்(26). இவர் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் மகள் வைத்தீஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒருவயது மகள் உள்ளார். இந்நிலையில், அஜித்குமார், அவரது மனைவி வைத்தீஸ்வரி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்ட வைத்தீஸ்வரி தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஒருவாரமாக மனைவி வராததாலும், அடுத்த வாரம் மகளுக்கு முதல் பிறந்த நாள் என்பதாலும் அவர்களை அழைத்து வருவதாக அஜித்குமார் தனது மாமியார் ஜீவா வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார்.

அப்போது, மனைவி மற்றும் குழந்தையை வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டபோது மாமியார் ஜீவாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார், மாமியார் ஜீவாவை செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஜீவா காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வைத்தீஸ்வரியின் சகோதரர் பிரவீன்குமார் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிந்து, அஜித்குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Related posts

வேதாரண்யம் தாலுகா தாமரைப்புலம் ஊராட்சியில் உயர்கோபுர மின்விளக்கு

திருமருகல் அருகே புதுச்சேரி சாராயம் கடத்தியவர் கைது

நாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவிற்கு சுலோகம் அனுப்பலாம்: கலெக்டர் தகவல்