மனைவியை குடும்பம் நடத்த அனுப்ப மறுத்த மாமியாரை வெட்டி கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது

ஆவடி: ஆவடி அடுத்த பொத்தூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (50). இவரது மனைவி கவிதா (45). இவர்களது மகள் பிந்து (25). இவருக்கும், சின்ன காஞ்சிபுரம், சேஷாத்திரி பாளையம் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ஆனந்தன் (32) என்பவருக்கும், கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஆனந்தன் அடிக்கடி மது அருந்திவிட்டு பிந்துவை அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிந்து, கடந்த 6 மாதத்துக்கு முன் பிந்து, ஆனந்தனை பிரிந்துவிட்டார். பின்னர் ஆனந்தன், பிந்துவை பலமுறை குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அதற்கு பிந்து மறுத்துவிட்டு தனது தாய் கவிதாவின் வீட்டிலேயே இருந்துவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிந்துவை நேரில் சந்தித்த ஆனந்தன், குடும்பம் நடத்த வீட்டுக்கு அழைத்துள்ளார்.அப்போது, மாமியார் கவிதா, மகள் பிந்துவை ஆனந்தனுடன் அனுப்ப மறுத்துவிட்டார். அப்போது, கவிதாவுக்கும், ஆனந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன், கத்தியை எடுத்து கவிதாவின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார மையம் கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஆனந்தனை நேற்று மதியம் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை, அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி  திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்….

Related posts

சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது

இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ₹40 லட்சம் வாசனை திரவியம் பறிமுதல்: இலங்கை விமான பயணிகள் 2 பேர் கைது