மனைவிக்கு மண்டபம் கட்டி விவசாயி வழிபாடு: கோவை அருகே நெகிழ்ச்சி

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பளையம் அருகே உள்ளது சிறுமுகை. இங்குள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (75) விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (59). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனிசாமிசரஸ்வதி தம்பதி ஒருவருக்கு ஒருவர் புரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு சரஸ்வதி திடீரென உயிரிழந்தார். மனைவியின் உடலை தோட்டத்திலேயே புதைத்த பழனிசாமி, அவரது நினைவாகவே சில காலம் வாழ்ந்தார். பின்னர், மனைவிக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்த அவர், அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டார். சரஸ்வதி அடக்கம் செய்த இடத்தில் நினைவு மண்டபம் அமைத்தார். இதில், சரஸ்வதியின் உருவச்சிலையை வடிவமைத்தார். பழனிசாமி தனது மனைவியின் சிலைக்கு தினமும் காலை, மாலை இருவேளையும் ஊதுபத்தி, கற்பூர தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டு வருகிறார். வெளியூர் சென்றால் பூஜை செய்வது தவறிவிடும் என்ற எண்ணத்தில் வெளியூர் செல்வதில்லை. மனைவியின் நினைவாக எழுப்பிய கோயிலில் தனது காலத்தை கழித்து வருகிறார். சரஸ்வதியின் நினைவுமண்டபம் பழனிசாமிக்கு ஒரு தாஜ்மகால் தான் என்று இந்த பகுதி மக்கள் கூறினர். இதுகுறித்து விவசாயி பழனிசாமி கூறுகையில், ‘திருமணமான நாள் முதல் கணவன், மனைவி இரண்டு பேரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். ஒரு நாள் கூட எங்களுக்குள் சண்டை வந்ததில்லை. ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது நினைவால் நினைவு மண்டபம் அமைத்து அதில் அவரது உருவச்சிலையை வைத்து காலை, மாலை இரண்டு வேளையும் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறேன். மனைவி இறப்பிற்கு பின்னர் அவரது நினைவுகளுடன் வாழ்வதை விட ஒவ்வொருவரும் மனைவி தன்னுடன் வாழும் போதே அவரை உயிருக்கு உயிராக அன்புடன் நேசித்து பாசம் செலுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்’ என்றார்….

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி