மனநல அபாயம்

உலகம் முழுவதும் மனநலம் பாதிக்கும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனா தொற்றையும் தாண்டி பலரையும் பாதிக்கும் வகையில் புதிய அபாயமாக இன்று மாறி இருக்கிறது. உலக சுகாதார மைய கணக்குப்படி 2019ல் உலகம் முழுவதும் மனநல பாதிப்புடன் 100 கோடி பேர் இருப்பது தெரிய வந்தது. இப்போது அத்தனையும் பல மடங்காக உயர்ந்து இருக்கக்கூடும் என்கிறார்கள். கொரோனா ஊரடங்கு, வேலை இழப்பு, பொருளாதார இழப்பு, வீட்டுக்குள் முடங்கியது, அதிக அளவு செல்போன், டிவி உபயோகம் உள்ளிட்டவை மக்கள் மனநிலையை மாற்றி அமைத்து விட்டது. இதனால் கவலை, மனச்சோர்வு, வளர்ச்சி கோளாறு உள்ளிட்ட பல்வேறு மனநல பாதிப்புகள் மக்களை தொற்றிக்கொண்டு உள்ளது.கொரோனாவுக்கு முன்பு லட்சம் பேரில் 2471 பேர் கவலையால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு பின்னர் அந்த எண்ணிக்கை 3,153ஆக உயர்ந்து விட்டது. மனச்சோர்வால் கொரோனாவுக்கு முன்பு 3,825 பேரும், கொரோனாவுக்கு பின்னர் 4,802 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கவலை, மனச்சோர்வு என்பது 50 சதவீதம் பெண்களுக்கு பொதுவான ஒரு நோயாகவே மாறிவிட்டது. மன அழுத்தம் பெண்களை அதிகமாக தொற்றும் போது அதன் பாதிப்பால் குடும்பம் முழுவதும் ஒருசில நேரம் நிலைகுலைந்து விடுகிறது. இப்போது உள்ள காலக்கட்டத்தில் இளம் பருவத்தினர் கூட எளிதாக மனநல பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். எல்லாம் எளிதில் அவர்களுக்கு கிடைப்பதால் நல்லது, கெட்டது புரிந்தும், தெரிந்தும் இருப்பதும் அதிக அளவு இளம் உள்ளங்கள் சீரழிவுக்கும், அதனால் மனச்சிதைவுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. அதிக மனப்பாதிப்பு 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவரை இறக்கும் சூழலுக்கு தள்ளிவிடும் அபாயமாக இப்போது உருவெடுத்து இருக்கிறது. இல்லாவிட்டால் இதய பாதிப்பு உள்ளிட்ட இன்னும்பிற நோய்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. மொத்தத்தில் நோயுடன் போராடும் வாழ்க்கை உருவாகி விடுகிறது. மனநிலை பாதிப்பு ஏழை, நடுத்தர நாடுகள் என்று இல்லை. இது உலகம் முழுவதும் உள்ள பொதுவியாதி. அதிக பாதிப்பு அமெரிக்காவுக்கு தான். அங்குள்ள மக்கள் தொகையில் 15.6 சதவீதம் பேர் மன பாதிப்பால் தவிக்கிறார்கள். தென்கிழக்கு ஆசியாவில் 13.2 சதவீத பாதிப்பு உள்ளது.இதை எல்லாவற்றையும் விட ஒவ்வொரு ஆண்டும் கவலை, மனச்சோர்வால் மட்டும் ரூ.80 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஒட்டுமொத்த மனநல பாதிப்பால் 2010ல் ரூ.200 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது. 2030ம் ஆண்டில் இந்த இழப்பு ரூ.500 லட்சம் கோடியாக உயரும் என்று உலக பொருளாதார அமைப்பு கணித்து இருக்கிறது. உலகமே நவீனத்தின் பின்னால் ஓடுவதும், தனிமனித உணர்வுகளுக்கு இடம் கொடுக்க மறுப்பதும் கூட அதிக மனஅழுத்தத்தின் பின்னணியாக அமைந்து இருக்கிறது. இது பேராபத்து. இதனால் உயிர் பலி அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை செய்கிறது உலக சுகாதார அமைப்பு. அதிக உஷார் கூட ஆபத்துதான். வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து வாழ்ந்து மனக்கவலையை துறப்போம்….

Related posts

தடை விலகியது

தங்க அம்பாரி

போர் உச்சக்கட்டம்