மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் நடப்பாண்டில் 117 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7.56 கோடி சுழல் நிதி கடன்: கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்

 

ராமநாதபுரம், ஜூலை 22: ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வட்டார வாரியாக விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளையும், கருத்துகளையும் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் விவசாயிகள் வறட்சி நிவாரணம், கால்வாய் தூர்வாருதல், போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோரிக்கைகளை கேட்டறிந்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறுகையில், விவசாயிகளின் முக்கிய கோரிக்கையை அரசு நிறைவேற்றிவிடும் வகையில் நடப்பாண்டிற்கான வறட்சி நிவாரண தொகை வழங்கிட அரசாணை பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, போகலூர், நயினார் கோயில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, ராமநாதபுரம், மண்டபம் மற்றும் திருப்புல்லாணி ஆகிய 11 ஊராட்சி ஒன்றியத்திற்கு விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணத்தொகை உறுதியாக கூடிய விரைவில் வழங்கப்படும்.அதேபோல் கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளுக்கான பயிர் கடன் காலதாமதமின்றி வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் கண்மாய், ஊரணி மற்றும் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என்றார்.

தொடர்ந்து மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் நடப்பாண்டிற்கு 117 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7.56 கோடிக்கான சுழல் நிதி கடன்களை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, துணை இயக்குநர் கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) (பொ) பாஸ்கரமணியன், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை