மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் கர்ப்பிணிகளும் தடுப்பூசி போடலாம்: ஐசிஎம்ஆர் அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் அனைத்து கர்ப்பிணிகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் பல்ராம் பார்கவா கூறி உள்ளார்.இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதில், பல்வேறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கர்ப்பிணிகள் விஷயத்தில் மத்திய அரசு இத்தகைய முடிவை எடுக்கவில்லை. கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடலாம் என உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கினாலும் கூட, பாதுகாப்பு குறைபாடு மற்றும் போதிய தகவல்கள் இல்லாததால் இந்த விஷயத்தில் இம்மாத துவக்கத்தில் மத்திய அரசு சில இடைக்கால வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது. அதில், கொரோனா தாக்கும் அதிக அபாயம் உள்ள கர்ப்பிணிகள், இணை நோய்கள் இருப்பவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடலாம் என கூறியிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. இதன்படி, அனைத்து கர்ப்பிணிகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த மே மாதம் தேசிய தடுப்பூசி வழிகாட்டும் அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. கொரோனா வைரசின் வீரியமிக்க உருமாற்றங்கள் புதிது புதிதாக வருவதால் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி அவசியம் என அந்த அமைப்பு பரிந்துரைத்தது. இதை மத்திய அரசு தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. இது குறித்து ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா அளித்த பேட்டியில், ‘‘கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும், அவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும்’’ என்றார். இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என இந்த அறிவிப்பை பல மருத்துவர்களும், நிபுணர்களும் வரவேற்றுள்ளனர். குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியமா?கொரோனா 3வது அலை வந்தால், குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனைகள் துரிதகதியில் நடக்கின்றன. இதற்கிடையே, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அவசியமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஐசிஎம்ஆர் இயக்குநர் பார்கவா, ‘‘சிறு வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக போதுமான தரவுகள் கிடைக்கும் வரை, இந்த விஷயத்தில் முடிவுக்கு வரமுடியாது. இந்தியாவில் 2 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. இதன் முடிவுகள் செப்டம்பர்-அக்டோபரில் கிடைக்கும். அதன்பிறகே முடிவு செய்ய முடியும்’’ என்றார்….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு