மதுரை விமானநிலையம் டூ சர்க்யூட் ஹவுஸ் வரை முதல்வருக்கு 18 கிமீ தூரம் வழிநெடுக வரவேற்பு

மதுரை, ஜூலை 16: கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். சென்னையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு விமானத்தில் மதுரை புறப்பட்ட அவர், காலை 11.25 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன் வந்திருந்தனர். விமான நிலையத்தில் முதல்வரை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, மகேஷ் பொய்யாமொழி, ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து வேனில் முதல்வர் சுற்றுலா மாளிகைக்கு 11.45 மணிக்கு கிளம்பினார். விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஷஹவுஸ் வரை 18 கிமீட்டருக்கு, 50க்கும் அதிக இடங்களில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமானநிலையத்திற்கு வெளியிலும், பெருங்குடி, பெரியார் நகர், சிந்தாமணி, விரகனூர், வண்டியூர், அண்ணாநகர், மாவட்ட நீதிமன்றம் ரோடு என அடுத்தடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள், கரகம், காவடி, ஒயில், மயில், பொய்க்கால் குதிரை ஆட்டம் என கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. பேண்ட் வாத்தியம் தாரை தப்பட்டை முழங்க மேளதாளத்துடன் வெகு உற்சாகத்துடன் வரவேற்பு வழங்கினர். முதலமைச்சரை வரவேற்க சாலையின் இருபுறமும் பொதுமக்கள் வெள்ளமென திரண்டனர். கொளுத்தும் வெயிலிலும் தொண்டர்கள் காத்திருக்க அவர்களின் வரவேற்பை முதலமைச்சர் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி, பெற்று கொண்டது திமுக தொண்டர்கள் இடையே புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை சர்க்யூட் ஹவுசிற்கு மதியம் 1.45 மணிக்கு, அதாவது 2 மணி நேரம் பயணித்து வந்தடைந்தார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை