மதுரை மாவட்டத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை இறுதி தேர்வு: ஏப்.28க்குள் முடிக்க நடவடிக்கை

மதுரை, ஏப். 17: மதுரை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித்தேர்வை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 14ம் தேதி துவங்கி, ஏப்.5ம் தேதி நிறைவடைந்தது. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 13ம் தேதி துவங்கி, ஏப்.3ம் தேதி நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்துவருகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்.6ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வுகள் வரும் ஏப்.20ம் தேதி நிறைவடைகிறது. இத்தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கிடையே தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித்தேர்வை ஏப்ரல் மாதத்திற்குள்ளேயே முடிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு வந்துள்ள சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மாவட்டத்தில், எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்தேர்வுகளை ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.17 முதல் ஏப்.21ம் தேதி வரை நடத்தப்பட வேண்டும்.

நான்கு, ஐந்தாம் வகுப்புகளை பொறுத்தவரை ஏப்.10ம் தேதியிலிருந்து ஏப்.28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வுகளை, மாவட்டங்கள் தங்களுடைய உள்ளூர் சூழ்நிலைக்கு தகுந்தவாறு, ஏப்ரல் 10ம் தேதி முதல் ஏப்.28ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித்தேர்வுகளை, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ள நாட்களில் முடிக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகா மேற்பார்வையில் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி