மதுரை திருமங்கலம் அருகே முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா கோலாகலம்

திருமங்கலம்: மதுரை அருகே வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் பிரியாணி திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் அமைந்துள்ளது முனியாண்டி சுவாமி கோயில். தமிழகம் முழுவதும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்துபவர்கள் இந்த சுவாமி பெயரிலேயே நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையும் மற்றும் மாசி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை அசைவ அன்னதானம் நடைபெறும். இந்தாண்டு தை மாதம் நடைபெற்ற திருவிழா கொரோனா கெடுபிடியால் வெளியூர் பக்தர்கள் கலந்து கொள்ள இயலவில்லை. மாசி இரண்டாம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அசைவ பிரியாணி திருவிழா நேற்றிரவு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 87 ஆண்டாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். வடக்கம்பட்டி, அலங்காரபுரம், பொட்டல்பட்டி கிராம மக்கள் ஒருவாரகாலமாக காப்புகட்டி விரதமிருந்தனர். நேற்று காலை வடக்கம்பட்டி உள்ளிட்ட மூன்று கிராமமக்கள் பால்குடம் எடுத்து வந்தனர். முனியாண்டி சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் பக்தர்கள் மாலை, தேங்காய், பழம் ஏந்திய பூத்தட்டு ஊர்வலம் கிளம்பியது. சுவாமிக்கான நிலைமாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம்பாட்டத்துடன் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்று முனியாண்டி கோயிலை அடைந்தனர். அங்கு முனியாண்டி சுவாமிக்கு நிலைமாலை சாற்றப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த தேங்காய் உடைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக கிடா, கோழிகளை காணிக்கையாக வழங்கினர். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கிடாக்கள், கோழிகளை கொண்டு முனியாண்டி சுவாமிக்கு 2500 கிலோவில் அசைவ பிரியாணி தயாரிக்கப்பட்டது.நள்ளிரவில் முதலில் சக்திகிடா முனியாண்டிக்கு பலியிடப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கிடா, கோழிகளை கொண்டு அசைவபிரியாணி தயாரிக்கப்பட்டது. அதிகாலை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சுவாமிக்கு அசைவபிரியாணி படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது. இதனையொட்டி காலை 5 மணிமுதலே கள்ளிக்குடி, வில்லூர், திருமங்கலம், விருதுநகர், டி.கல்லுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவடடார பகுதிகளை சோ்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அசைவ பிரியாணியை வாங்கி சென்றனர். இந்த திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் முனியாண்டி விலாஸ் ஓட்டல்களுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது என அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருவிழாவில் கலந்து கொண்ட சென்னை கேளம்பாக்கத்தை சேர்ந்த ஹேமலதா கூறுகையில், ‘எங்கள் ஓட்டல்களில் முதலில் வரும் வாடிக்கையாளர் தரும் தொகையை சேமித்து வைத்து கோயிலுக்கு காணிக்கையாக வழங்குவோம்’ என்றார். கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஜெகதீஸ்வரி கூறுகையில், ‘இந்த திருவிழாவில் பெண் பார்க்கும் படலமும் நடக்கும்’ என்றார்….

Related posts

பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் முத்தமிழ் முருகன் மாநாடு ஆலோசனை கூட்டம்

தங்க கடத்தல்: மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த முடிவு