மதுரை குருவிக்காரன் சாலை பாலம் அருகே வைகை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்: பூமிநாதன் எம்எல்ஏ கோரிக்க

மதுரை, ஏப். 17: மதுரை தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர குருவிக்காரன் சாலை பாலம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டுமென பூமிநாதன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘மதுரையில் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதை வரவேற்கிறேன். மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் டிஎம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் முழுஉருவச்சிலை அமைத்திட உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். தமிழ்நாட்டில், கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட்டுகளாகவும்.

அதேபோல், விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட் இலவச மின்சாரமாகவும் உயர்த்தியது பாராட்டத்தக்கது. மின்வாரியத்தில் நிலுவையில் உள்ள 5,493 கேங்மேன் பணியாளர்களுக்கு விரைவாக பணிநியமன ஆணை வழங்க வேண்டும். மதுரையில் பூமிக்கடியில் புதைவிட கம்பிவடங்கள் அமைக்க வேண்டும். மதுரை தெற்குத்தொகுதியில் 83 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 20 கடைகள் மட்டும் சொந்த கட்டிடத்தில் உள்ளன. அதில் 3 கடைகள் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ளன. இது மருத்துவமனைக்கு வருவோருக்கு இடையூறாக உள்ளது. இதனை மாற்ற வேண்டும். 20 லட்சத்திற்கு மேல் மக்கள் உள்ள பகுதியை தனி சுகாதார மாவட்டமாக அறிவிக்கலாம்.

அதன்படி, மதுரை மாநகராட்சி பகுதியை தனி சுகாதார மாவட்டமாக அறிவித்து, மதுரை தெற்குவாசல் திரவியம் பிள்ளை மாநகராட்சி மருத்துவமனை மற்றும் அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையம் பழமையான கட்டிடம் போன்றவற்றை கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும். மதுரை பத்திரிகையாளர்கள் காலக்கிரையத்தில் பணம் செலுத்தி பட்டா பெற்றுள்ளனர். அவர்களுக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி இடையூறு செய்கிறார். அரசு உடனே தலையிட்டு அவர்களுக்கு நல்ல தீர்வு காண வேண்டும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, இதன் சார்பு மருத்துவமனை பாலரெங்காபுரத்தில் மண்டல புற்றுநோய் மையத்தை பழுதுபார்க்க பராமரிப்பு பணிக்கான நிதியை கூடுதலாக ஒதுக்க வேண்டும்.

மதுரை தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இது சில நேரம் அசுத்தமானதாகவும், துர்நாற்றமாகவும் இருக்கிறது. இதற்கு தீர்வாக குருவிக்காரன் சாலை அருகில், வைகை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டி அங்கிருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லலாம். ஏற்கனவே நீர்வழித்தடம் உள்ளது. அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சிந்தாமணி ரோட்டில் ரயில்வே கிராசிங், அதிகமான அரிசி ஆலைகள் உள்ளதால், இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். எனது தொகுதியில் ஒரு உழவர் சந்தை அமைக்க வேண்டும். இக்கோரிக்கை குறித்து சட்டமன்றத்தில் பேசியுள்ளேன்’ என்றார்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி