மதுரை அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாலைக்கோயில் கண்டுபிடிப்பு-தூய தமிழ்ப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது

மதுரை : மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டியில் இருந்து விருதுநகருக்கு செல்லும் வழியில் உள்ள கோபாலபுரம் கிராமத்தில் தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில் குழுவினர் கள ஆய்வு செய்தனர். அப்போது பாதி புதைந்த நிலையில் கல்வெட்டுடன் மாலைக்கோயில் ஒன்று வயல்வெளியில் இருந்தது கண்டுபிடித்தனர். இது குறித்து முனீஸ்வரன் கூறுகையில், ‘போர் அல்லது வேறு காரணங்களில் கணவர் இறந்தபின் அவனுடனோ, தனியாகவோ உடன்கட்டை ஏறும் மனைவிக்கு அமைக்கப்படும் சதிக்கற்களை மாலைக்கோயில் என பொதுமக்கள் வணங்கி வருகின்றனர். கோபாலபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சதிக்கல் 2½ அடி உயரம், 1½ அடி அகலம் உள்ளது.இதில், ஆண் மற்றும் பெண்ணின் தலையில் உள்ள கொண்டை சற்று சரிந்துள்ளது. ஆணின் வலது கையில் உள்ள வாள் கீழ் நோக்கி உள்ளது. அணிகலன்களுடன் காலை மடக்கி தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் ஆணும், வலது கையை உயர்த்தி பெண்ணும் காணப்படுகின்றனர். இது மாலைக்கோயில் என்னும் பெயரில் வழிபாட்டில் உள்ளது. இதில் உள்ள கல்வெட்டு மூலம், சிற்பத்தில் உள்ள ஆண் நாமகன் எனவும், பெண் சிவை எனவும், அவர்கள் நினைவாக இக்கல் வைக்கப்பட்டுள்ளது அறிய முடிகிறது. அவர்கள் புகழ் கொட்டட்டும் என கல்வெட்டு சொல்கிறது. தூய தமிழில் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவை என்பது பார்வதியைக் குறிக்கும் சொல். சதி, மாலை ஆகிய சொற்களுக்கு பெண் என பொருள் உண்டு. தென் தமிழ்நாட்டில் சதி என்ற சொல்லுக்கு மாற்றாக மாலை என்ற தூய தமிழ்ச் சொல்லே கல்வெட்டுகளில் இருப்பதை அறிய முடிகிறது. சிவை என்றால் பார்வதி, காளி என்பது பொருள். இப்பகுதியில் வேளாம்பூர், மதவநாயக்கனூர், திருஉண்ணாட்டூர் ஆகிய ஊர்கள் இருந்து அழிந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. இது வேளாண் பகுதியாகவும், வணிகப்பகுதியாகவும் இருந்துள்ளது. இப்பகுதியில் இருந்த ஒரு போர் வீரனாக நாமகன் இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். …

Related posts

புலி நகம், பற்கள் விற்க முயன்ற 3 பேர் சிறையில் அடைப்பு

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து