மதுரையில் போலி ஆவணம் தயாரித்து கடை அபகரித்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது புகார்

மதுரை, ஜூலை 25: மதுரை பார்க்டவுன் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் குமரபாண்டி (48). இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் வந்து, கலெக்டர் சங்கீதாவிடம் புகார் மனு அளித்தார். அம்மனுவில், ‘நான் மீனாட்சி அம்மன் கோயில் அருகே முன்பிருந்த சென்ட்ரல் மார்க்கெட்டில் கடை நடத்தி வந்தேன். அதன்பின் மாட்டுத்தாவணியில் மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு எனது பெயரில் 392 நம்பர் கடை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை மாநகராட்சி எனக்கு வழங்கியுள்ளது. எனது பெயரில் வாடகை ரசீது கட்டியுள்ளேன்.

இந்நிலையில் எனக்கு தெரியாமல் கடந்த 2019ல் போலி ஆவணம் தயாரித்து எனது பெயரில் இருந்த கடையை அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் மார்க்கெட் செல்லத்துரை பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்ட போது, ஆவணத்தில் உங்கள் பெயர் உள்ளது. ஆனால், பில் போடும் கணினியில் மட்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறினர். அதனை மாற்றி, எனது பெயருக்கு மாற்றி தருமாறு பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே கடையின் உரிமத்தை எனது பெயருக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாநகாரட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை