மதகுபட்டி பகுதியில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் விவசாயிகள் வலியுறுத்தல்

சிவகங்கை, டிச. 2: மதகுபட்டி துணை மின்நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை அருகே மதகுபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. முற்றிலும் கிராமப்புறங்களை மட்டுமே கொண்ட இப்பகுதியில் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தின் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் சீரான மழை இல்லாததால் இலவச மும்முனை மின்சாரத்தின் மூலம் இயங்கும் பம்புசெட்டுகளை நம்பியே மதகுபட்டி, அரளிக்கோட்டை, ஏரியூர், ஒக்கூர், ஜமீன்தார்பட்டி, அலவாக்கோட்டை, நாமனூர், கீழப்பூங்குடி, அழகமாநகரி, திருமலை, கட்டாணிபட்டி, கள்ளராதினிபட்டி ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் ஏராளமானோர் கரும்பு, நிலக்கடலை, நெல், கத்திரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகள் பயிர் செய்து வருகின்றனர்.  கடந்த 13 ஆண்டுகளாக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக பகலில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரம் இல்லாமல் எப்போது மின்சாரம் வழங்கப்படும் என்பதே தெரியாத நிலை உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. விவசாயிகள் தெரிவித்தாவது:இலவச மும்முனை மின்சாரத்தின் மூலம் பம்புசெட்டுகள் இயக்கி கிடைக்கும் நீர் மூலம் விவசாயம் செய்து வருகிறோம். பெரும்பாலும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பம்புசெட்டுகளை இயக்கி நீர் பாய்ச்சுவோம். ஆனால் தற்போது இரவு நேரங்களில் எப்போது மின்சாரம் வரும் என்றே தெரியாத நிலை உள்ளது. இதனால் சரிவர நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே முன்பு போல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி