மதகடிப்பட்டு சாராயக்கடையில் தமிழக போலீசார் அதிரடி ரெய்டு

திருபுவனை, ஜூலை 30: புதுச்சேரி மதகடிப்பட்டு சாராயக் கடைக்குள் தமிழக போலீசார் அதிரடியாக நுழைந்து காசாளரிடம் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் விஷசாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து புதுச்சேரியையொட்டியுள்ள பகுதிகளில் தமிழக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புதுவை மாநிலம் ஆண்டியார்பாளையம் சாராயக்கடையில் இருந்து, பாக்கெட் சாராயம் விற்கப்படுவதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்டமங்கலம் போலீசார் ஆண்டியார்பாளையம் சாராயக்கடையில் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்தனர். சாராயக்கடை காசாளர் பிரமானந்தம் என்பவரை தமிழக போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

தொடர்ச்சியாக நேற்று புதுச்சேரி எல்லைப்பகுதியான மதகடிப்பட்டு மாட்டுச்சந்தை எதிரே உள்ள சாராயக்கடையில் வளவனூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ஜோதி ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட தமிழக போலீசார் திடீரென சாராயக்கடைக்குள் நுழைந்து பாக்கெட்டுகளில் சாராயம் விற்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாக்கெட் சாராயம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பணியில் இருந்த காசாளர் முருகையனிடம் பாக்கெட்டுகளில் சாராயம் விற்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பாக்கெட்டுகளில் சாராயம் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக கைது செய்து சிறையில் அடைப்போம் என எச்சரிக்கை விடுத்தனர். புதுச்சேரி சாராயக்கடைகளில் தமிழக போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்