மண் வளம், நீர் வளத்தை காத்து உற்பத்தியை பெருக்கி பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்-விவசாயிகளுக்கு கலெக்டர் வலியுறுத்தல்

வேலூர் : மண் வளம், நீர்வளத்தை காத்து உற்பத்தியை பெருக்கி பொருளாதாரத்தை விவசாயிகள் உயர்த்திக்கொள்ளுங்கள் என விவசாயிகளிடம் கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளுக்கான இயற்கை விவசாயம் மற்றும் விவசாய விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் விவசாய கடன் பெறுவதற்கான முகாம் விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர் மகேந்திரபிரதாப் தீட்சித் முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் வரவேற்றார்.தொடர்ந்து கண்காட்சி முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது: வேளாண் தொழிலில் உள்ள சிரமங்கள் நீக்க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழகத்தில் வேளாண்மைக்கு என தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1989ம் ஆண்டு விவசாய தேவைக்காக மின்சாரம் வேண்டும் என்றால் அதற்கான தொகையை விவசாயிகள் செலுத்தியிருக்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தியது தமிழகம் தான். நாட்டிலேயே முதல்முறையாக இந்தத் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதேபோல் உரம், விதை, கோடை உழவு, கிணறு வெட்டவும், சொட்டுநீர் பாசனம் அமைக்கவும் மற்றும் உழவர் நலன்சார் திட்டங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதால் வேளாண் நிலங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதைப்போக்கவே வேளாண் பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் தொழில்நுட்ப கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பெரிய நிலப்பரப்பை கால்நடை மூலம் உழவு செய்வது இன்றைக்கு சாத்தியமற்றது. அதற்காகவே டிராக்டர்கள் மூலம் உழவு செய்யப்படுகிறது.சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் சிக்கனமாகும். உற்பத்தியை பெருக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கூட்டு பண்ணையம் மூலம் விவசாயிகள் தங்களது வருமானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும். மண்வளம், நீர்வளத்தை காத்து உற்பத்தியை பெருக்கி பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சியில் சொல்லப்படும் கருத்துக்களை விவசாயிகள் கேட்டு நிலத்தில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) வெங்கடேஷ், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் மோகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்….

Related posts

தஞ்சையில் கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் எண்ணெய் பனை சேவை மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் டிஆர்பி ராஜா..!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

“ஒருவருடம் காத்திருந்து ரெக்கி ஆபரேஷன்’’ 5 முறை முயற்சி தோல்வியில் முடிந்தது: 6 வது ஸ்கெட்சில் தீர்த்து கட்டினோம்: ஆம்ஸ்ட்ராங் கொலையில் பகீர் தகவல்கள் அம்பலம்