மண் எடுத்த வாகனங்களை சிறைபிடித்து மக்கள் மறியல்

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மேல்மதுரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தவாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, அப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களுக்கு நீர் பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஏரியில் சாலை அமைப்பதற்காக மண் அள்ளுவதற்கு டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து, தற்போது நாள்தோறும்  ஜேசிபி இயந்திரம் மூலமாக, சுமார் 10 அடி ஆழத்துக்கு மேல் மண் தோண்டி எடுக்கப்பட்டு, ஏராளமான லாரிகள் மூலமாக வெளியிடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. மேலும், லாரிகளில் மண் அள்ளுவதற்கு வசதியாக, ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் மண் கொட்டி அடைக்கப்பட்டதால் நீர்வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.கூத்தவாக்கம் பெரிய ஏரியில் அதிக ஆழத்தில் மண் அள்ளப்பட்டு வருவதால், நீர்நிலைகள் பாதிக்கப்படுவதுடன், விளைநிலங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அவலநிலை உள்ளது. இந்த ஏரியில் இரவு பகலுமாக லாரிகளில் மண் அள்ளுவதை சம்பந்தப்பட்ட காவல், வருவாய் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கூத்தவாக்கம் பெரிய ஏரியில் மண் அள்ளும் பணியில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரம், 50க்கும் மேற்பட்ட லாரிகளை நேற்று மாலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், ஏரியில் அதிகளவு மண் அள்ளுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது….

Related posts

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்