Sunday, June 30, 2024
Home » மண்ணில் இருந்து கிடைத்தது மகத்துவம் நிறைந்த விஸ்வரூப தரிசன ஆஞ்சநேயர்

மண்ணில் இருந்து கிடைத்தது மகத்துவம் நிறைந்த விஸ்வரூப தரிசன ஆஞ்சநேயர்

by kannappan

நாகர்கோவில் : சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகள் அருள்பாலித்தாலும், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலின் கதாநாயகன் ஆஞ்சநேயர் தான். 1740ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா மகாராஜாவின் படை வீரர்களின் ஒரு பிரிவினர் குளச்சலில் டச்சு போர் வீரர்களுடனும், மற்றொரு பிரிவினர் வடக்கே காயங்குளம் மன்னருடனும் போரிட்டு ெகாண்டிருந்தனர். அந்த சமயம் பார்த்து ஆற்காடு நவாப் சந்தாசாகிப், அவரது சகோதரர் மற்றும் படை தளபதி சப்தார் அலிகான் ஆகியோர் நாஞ்சில் நாட்டை நோக்கி படையெடுத்தனர். வெற்றி பெற்ற நவாப் படையினர், பழையாற்றை கடந்து சுசீந்திரம் வந்தடைந்தனர். அந்த காலத்தில் போர் போன்ற சமயங்களில் நாட்டின் வளத்தை காப்பாற்றும் வகையில் பொன், பொருட்கள் இருந்தால் அவற்றை மண்ணுக்குள் புதைத்து வைப்பார்கள். அந்த வகையில் நவாப் படையினர் வருவதை அறிந்து, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுமார் 22 அடி உயர ஆஞ்சநேயரையும் கோயிலுக்குள் மண்ணில் புதைத்தனர். 2 நூற்றாண்டுகளாக யாருமே புதைந்து கிடந்த ஆஞ்சநேயரை எடுத்து நிறுத்த வில்லை. காலங்கள் பல உருண்டோடின.  பல மன்னர்களின் ஆட்சிகள், பல விதமான மாற்றங்கள் வந்த பின்னரும், திருக்கோயிலில் பல திருப்பணிகள் மன்னர்கள்  செய்த பின்னரும் யாருமே மண்ணில் புதைந்த ஆஞ்சநேயரை எடுக்க முன் வர வில்லை. இப்படியாக சுமார் 200 ஆண்டுகள் வரை கடந்ததாக கூறுகிறார்கள். அதற்கு பல காரணங்களும் கூறப்படுகின்றன. இந்த கோயிலில் சிவபெருமானுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிவாலயம் என்று போற்றப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு கோயில் எதற்கு? என்ற ஒரு பிரிவினர், இவருக்கு கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தால் சிவபெருமானின் முக்கியத்துவம் போய் விடும் என்று ஒரு பிரிவினர் கூறினர். சிலர் சிலையை தோண்டி எடுத்து எங்கு நிலை நிறுத்துவது என்றும் கூறி வந்தனர். நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பின், ஆஞ்சநேயர் தனது லீலா வினோதங்களை சிறிது, சிறிதாக காட்ட தொடங்கினார். கோயிலில் மண்ணில் புதைக்கப்பட்ட சிலை பகுதி நெடுநீள கல் தூண் போல் இருந்ததின் மீது சிறுவர்கள் ஏறி விளையாடுவதும், கீழே விழுந்து ரத்த காயங்கள் ஏற்படுவதும் வாடிக்கையானது. கோயிலுக்கு வருபவர்கள் இந்த பகுதியில் அமர்ந்து இருக்கும் போது ஏதோ உருவம் கண்டு பயந்து நடுங்குவதும் நடந்தது. இது போன்ற நிகழ்ச்சிகளை வயது முதிர்ந்த பெரியவர்கள் கூறி சென்றுள்ளனர். அந்த சமயத்தில் திருவிதாங்கூர் மன்னராக இருந்த  சித்திரை திருநாள் மகாராஜா காதுக்கும் இந்த பிரச்னை சென்றது. இதையடுத்து புகழ் பெற்ற மலையாள ஜோதிடர்கள் மூலம் பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதன் பின்னர் தோண்டி சிலையை புரட்டி பார்த்த போது சீதா தேவிக்கு அசோக வனத்தில் காண்பித்த விஸ்வரூப தரிசன கோலமே அச்சிலை என்பதை காண முடிந்தது. தேவ பிரசன்னம் நடத்திய ஜோதிடர் அறிவுரைப்படி சிலையை நிலை நிறுத்த இடமும் தேர்வு செய்யப்பட்டது. சிலைக்கு எந்த வித சேதமும் ஏற்படாமல் அன்றைய தேவஸ்தான ஆணையராக இருந்த மாங்கொம்பு நீலகண்ட ஐயர், திருக்கோயிலின் ஸ்தானிகராக விளங்கிய பரமேஸ்வர சர்மா ஆகியோரின் பெரும் முயற்சியால் ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் 1930ம் ஆண்டு சித்திரை 19ம் தேதி ராமர், சீதாதேவி சன்னதிக்கு எதிரே (தற்போதைய இடம்) ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது. சிலை நிறுவப்பட்டு 90 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆகம விதிகளின் படி அஷ்டபந்தம் (உறைப்பித்தல்) செய்து பிரதிஷ்டை செய்யாத காரணத்தால் யார் வேண்டுமானாலும் அவரை தொட்டு வணங்கி கொள்ளலாம். சிரஞ்சீவி வரம் பெற்றவர் ஆஞ்சநேயர். பிரதிஷ்டை பூஜை நடந்திருந்தால் அதன் சக்தி மேலும் கூடி விடும். மூல விக்ரகங்களுக்கு சக்தி குறைந்து விடும் என்று சாஸ்திர விதிமுறை கற்றவர்கள் கூறுகிறார்கள். தலையை சிறிது சரித்து, குவித்த கரத்தோடு ராமரையும், சீதாதேவியையும் வணங்கி நிற்கும் இந்த பக்தி சொரூபமான காட்சியை காண ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கிறார்கள். சுசீந்திரம் கோயிலில் மண்ணில் இருந்து கிடைத்த மாணிக்கமாக திகழ்கிறார் மாருதி. சாஸ்திர முறைப்படி பிரதிஷ்டை செய்யாமல் நாளுக்கு நாள் இவரது சக்தி பெருகி வருகிறது. வல்லமை, பிரதிஷ்டை செய்து பூஜை செய்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை எண்ணி பார்க்கும்போதே மெய்சிலிர்க்கிறது. சுசீந்திரம் கோயிலில் மன்னர் கால கடைசி திருப்பணியும் இதுவே ஆகும். கீழ்சாந்தி போற்றிமார்கள் இங்கு பூசாரிகளாக பணி செய்து வருகிறார்கள். தாணுமாலயன் சன்னதி முன் உள்ள செண்பகராமன் மண்டப தூண்களில் ஆஞ்சநேயர் இலங்கையில் நடத்திய அற்புத லீலைகளை புடைச்சிற்ப வடிவில் காணலாம். அதில் ஒரு தூணில் இலங்கை அதிபதியான ராவணேஸ்வரன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க அவர் எதிரே வீர ஆஞ்சநேயர் தனது வாலால் சிம்மாசனம் அமைத்து கம்பீரமாக அமர்ந்திருக்கும் காட்சி உள்ளது. பக்தர்களை கவர்ந்திழுக்கும் காந்தமாக இருக்கும் ஆஞ்சநேயரை காண வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரிக்கிறது. வணங்கி நிற்பவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார் இந்த மாருதி.  மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்த ஆஞ்சநேயருக்கு, அவரது பிறந்தநாளில் பல்வேறு அபிஷேகங்கள் நடக்கின்றன. சுசீந்திரம் கோயிலில் நடக்கும் விழாக்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தியும் ஒன்றாகும். அந்த வகையில் வருகிற 2ம்தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி ஆகும். கம்பன் பாடியதை போல, அஞ்சனா தேவியின் மைந்தனான வீர அனுமனை வணங்கி ஐஸ்வர்யம் பெறுவோம்.22 அடி உயரம் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை  மொத்தம் 22 அடி ஆகும். சிலை பாதத்தின் கீழே உள்ள 4 அடி பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது நாம் பார்ப்பது 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை  மட்டும் தான். சிலை பாதத்தில் இருந்து உச்சி வரை எந்த வித பிடிப்பும் இல்லாமல் நிற்கிறது….

You may also like

Leave a Comment

14 − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi