மண்டல அபிஷேக பூஜை நிறைவு விழா நாளில் கச்சபேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் மார்ச் 21: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகத்தின் மண்டல அபிஷேக பூஜை நிறைவு விழாவில், யாக சாலையில், கச்சபேஸ்வரருக்கு 1008 சங்குகளில் புனிதநீர் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், திருமால் ஆமை வடிவில் வந்து ஈஸ்வரனை வணங்கி பேறு பெற்ற திருத்தலமாகவும், தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்க்கும் திருத்தலமாகவும் காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோயில் விளங்குகிறது.

இக்கோயிலில், கடந்த 2005ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றநிலையில், ₹4 கோடி செலவில், திருப்பணிகள் நடைபெற்று கடந்த பிப்ரவரி 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த 48 நாட்களாக மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில், விழாவின் 48வது நாள் மண்டல அபிஷேக பூஜையின் நிறைவு நாளான நேற்று கோயில் யாக சாலையில் 1008 சங்குகளில் புனிதநீர் வைத்து சிவாச்சாரியார்கள், மந்திரங்கள் ஒலிக்க சிவவாத்தியங்கள் மேள தாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. சங்காபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழுவின் தலைவர் பெருமாள், செயலாளர் சுப்பராயன், செங்குந்த மகாஜன சங்க தலைவர் சிவகுரு ஆகியோர் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை