மணிமுத்தாறு 2வது வார்டு செட்டிமேடு பகுதியில் காட்சி பொருளான மின்கம்பங்கள்-தெரு விளக்குகள் எரியாததால் மக்கள் அவதி

விகேபுரம் : விகேபுரம் அருகே உள்ள மணிமுத்தாறு பேரூராட்சி 2வது வார்டு செட்டிமேடு இந்திரா காலனிக்கும் கோரையார் குளம் அய்யா கோயிலுக்கும் இடைப்பட்ட சாலையில் உள்ள மின்கம்பங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. இந்த பகுதியில் அடிக்கடி காட்டு பன்றிகள் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாகும். மேலும் இப்பகுதி வாழ் மக்கள் இந்த சாலையின் வழியாக தான் மதுரா கோட்ஸ் மில்லுக்கு வேலைக்கு இரவிலும் பகலிலும் இரு சக்கர வாகனங்களில் சென்று வருவது வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த சாலை அடிக்கடி இருளில் மூழ்குவதால் வனவிலங்குகளால் விபத்துகள் ஏற்படுகிறது. இது பற்றி  வார்டு திமுக கவுன்சிலர் சிவா கூறியதாவது: ‘தெரு விளக்குகள் எரியாதது குறித்து பலமுறை பேரூராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் வேம்பையாபுரம் கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற எஸ்ஐ கணபதி வீட்டில் இருந்து மருதுபாண்டி வீடு வரை உள்ள சுமார் 10  குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்குடியிருப்புகளுக்கு  ஆலமர விழுதுகள் மின்கம்பிகளில் பட்டு கடந்த இரண்டு வருடங்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்குவதால் வனவிலங்குகள் சிறுத்தைகள் குடியிருப்புக்குள் புகுந்து கால்நடைகளை தூக்கி செல்கிறது. அதை தடுத்தால் மனித உயிருக்கு பேரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் குழந்தைகள் படிப்பும் தொடர்ந்து பாதிப்படைந்து வருகிறது. இது சம்பந்தமாக மருதுபாண்டி உள்ளிட்ட குடியிருப்பு வாசிகள் கொடுக்கும் புகார் மனு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆலமரத்து விழுதுகளை வெட்டினால் தான் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். அந்த பணியை மின்சார வாரியம், பேரூராட்சி நிர்வாகம் தான் செய்ய வேண்டும் என்று கூறுகிறது பேரூராட்சி நிர்வாகம் மின்சார வாரியம் தான் பராமரிப்பு செய்ய வேண்டும் என்று கூறி புறக்கணிப்பு செய்வதால் இப்பகுதி அடிக்கடி இருளில் மூழ்கி இப்பகுதியில் வாழும் தலித் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறார்கள். அதனால் பாதுகாப்பு நலன் கருதி இந்த சாலையில் உள்ள மின்கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் எரிவதற்கும் மற்றும் வேம்பையாபுரம் கிராமத்தில் வசிக்கும் 10 குடியிருப்புகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கும் விபத்துகளையும் ஆபத்துக்களையும் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்….

Related posts

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வியில் புதிதாக 4 பட்டயப்படிப்புகள் அறிமுகம்