மணல் கடத்தல் வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பிஷப் உள்ளிட்ட 6 பாதிரியார்கள் கைது!!

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் பகுதியில் நடந்த மணல் கடத்தல் தொடர்பான வழக்கில்  சிபிசிஐடி போலீசாரால் கேரளாவைச் சேர்ந்த பிஷப் உள்ளிட்ட 6 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக பிஷப் மற்றும் பாதிரியார் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள பொட்டல் கிராமத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா சிரோ மலங்கரா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான 300 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் 2019 ஆண்டு நவம்பர் மாதம் முதல், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் என்பவருக்கு எம் சாண்ட் தயாரிக்கும் ஆலை நடத்த ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. இவர் கோட்டையம் குன்டூர்சட்டி சாலைப்பகுதியில் உள்ள ஆலயத்தில் பாதிரியாராக இருந்தார். இவரின் என் சாண்ட் நிறுவனத்தில் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி அருகில் உள்ள வண்டல் ஓடைகளில் இருந்தும், தாமிரபரணி ஆற்றில் இருந்தும் சட்ட விரோதமாக ஆற்றுமணல் கடத்தி விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் தெரியவர சேரன்மகாதேவி  உதவி ஆட்சியர் பிரதிக்தயாள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஓடைகளில் இருந்து 27,774 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணல்  கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஐகோர்ட் உத்தரவின் படி, போலீசார், ஒப்பந்ததாரரான பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக வீரவநல்லூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக அப்போதைய கனிமவளத் துறை உதவி இயக்குநர்  சபீதா, துாத்துக்குடி மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இவரின் கணவர் முகமது சமீர் 2021 ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்யும் வகையில் எம் சாண்ட் நிறுவனத்துக்கு சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் ரூ.9.50 கோடி அபராதம் விதித்தார். மணல் கடத்தலில் உயர் அதிகாரிகள் மற்றும் பெரும்புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் மணல் கடத்தலில் தொடர்புடைய கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் மற்றும் ஐந்து பாதிரியார்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். விசாரணைக்கு பிறகு இவர்கள் அனைவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் நெல்லை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் பாதிரியார் ஜோஸ் சமகலா ஆகிய இருவரும் சிறுநீரக கோளாறு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் கலவியால் ஆகிய 4 பேரையும் போலீசார் நாங்குநேரி சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோஸ் சமகலாவுக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட தனிமைபடுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே பாதிரியார்களை ஜாமீனில் எடுப்பதற்காக பத்தனம்திட்டா சிரோ மலங்கரா டயோசிசன் நிர்வாகம் மனு தாக்கல் செய்துள்ளது.  …

Related posts

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை

பேருந்திற்காக நின்று கொண்டிருந்த துணை நடிகைக்கு பாலியல் சீண்டல்: வடமாநில வாலிபர் கைது

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை; பேஸ்புக் காதலன் கைது