மணப்பாடு திருச்சிலுவை திருத்தல 444வது மகிமைப் பெருந்திருவிழா நாளை மறுதினம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

உடன்குடி, செப். 2: மணப்பாடு திருச்சிலுவை திருத்தலத்தின் 444வது மகிமைப் பெருந்திருவிழா, நாளை மறுதினம் (4ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. உடன்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரை ஓரத்தில் மணலும், கல்லும் சேர்ந்த சுமார் 50 அடி உயரத்தில் மணல் குன்று உள்ளது, இந்த குன்றின் மீது அமைந்துள்ள திருச்சிலுவை நாதர் திருத்தலத்தின் 444வது ஆண்டு மகிமைப் பெருந்திருவிழா, நாளை மறுதினம் (4ம் தேதி) காலை 6.30 மணிக்கு கோயில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அமலிநகர் பங்குதந்தை வில்லியம் சந்தானம் தலைமை வகித்து மெய்யான திருச்சிலுவை ஆசீர் வழங்கி, மறையுரை ஆற்றுகிறார்.

தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 6.30 திருப்பலி மற்றும் பல்வேறு சபை சார்பில் நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 8ம் தேதி அன்னை மரியாள் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை புனித வளன் பள்ளி வளாகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது, 13ம் தேதி மாலை 4.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகைக்கு வரவேற்பு, மாலை பெரும் விழா மற்றும் மாலை ஆராதனை சிறப்பு மறையுரை நடக்கிறது.

14ம் தேதி மகிமை பெருவிழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு திருப்பலி, 5 மணிக்கு மலையாள திருப்பலி, 6 மணிக்கு திருத்தலத்தை சுற்றி வந்து, மகிமைபெரும் விழா நிகழ்ச்சி, புதிய சபையினர் தேர்வு செய்தல், மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர் மற்றும் மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல் நடக்கிறது. மாலை 5 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது, திருவிழாவின் முக்கியமான நாட்களான 13 மற்றும் 14ம் தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து திருத்தலத்திற்கு திரளானோர் வந்து செல்வார்கள். எனவே அன்றைய தினம் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை மணப்பாடு புனித யாகப்பர் பங்குதந்தையர்கள் மற்றும் விழா குழுவினர், ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

Related posts

பேராவூரணி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் குழுக்கள் தயாரிப்பு பொருள்கள் விற்பனை

குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கைகால் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை