மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மஞ்சூர், ஜூன் 26: மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த சூறாவளி காற்றும் வீசுகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிண்ணக்கொரை, அப்பர்பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் மற்றும் வனப்பகுதிகளில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவும் சாரல் மழையுடன் விடிய, விடிய பலத்த காற்று வீசியது.

இதில் மஞ்சூர் அருகே கேரிங்டன் என்ற இடத்தில் ராட்சத மரம் ஒன்று சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மஞ்சூர் மற்றும் கிண்ணக்கொரை, இரியசீகை பகுதிகளில் இருந்து சென்ற அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலைதுறை குந்தா பிரிவு உதவி பொறியாளர் பெருமாள், சாலை ஆய்வாளர் நஞ்சூண்டன் ஆகியோர் மேற்பார்வையில் சாலைப்பணியாளர்கள் விரைந்து சென்று ரோட்டில் விழுந்த மரத்தை நீண்ட போராட்டத்திற்கு பின் வெட்டி அகற்றினர். சுமார் 1 மணி நேர தாமதத்திற்கு பின் மீண்டும் இந்த சாலையில் போக்குவரத்து துவங்கியது.

Related posts

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

2 குழந்தைகளுடன் தந்தை திடீர் மாயம் நகை, பணத்தையும் எடுத்துச் சென்றார்