மஞ்சள் குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் சரிந்தது: உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை

சேலம்: மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வர தயங்குகின்றனர். குவிண்டால் விலை ஆயிரம் வரை சரிந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் பல்லாயிரம் டன் மஞ்சள் கிடைக்கிறது. வாசனை திரவியம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, மருந்து, மாத்திரை தயாரிக்கும் கம்பெனிகள், அழகு சாதனபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு மஞ்சள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சமீப காலமாக வட மாநிலங்களிலும் மஞ்சள் சாகுபடி நடக்கிறது. இதனால் வட மாநில வியாபாரிகள் வரத்து குறைந்து, கடந்த சில மாதமாக மஞ்சள் விற்பனை சரிந்துள்ளது. மஞ்சளுக்கு தற்போது உரிய விலை கிடைக்கவில்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஈரோட்டில் தான் மஞ்சள் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. அடுத்தபடியாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி நடந்து வருகிறது. சேலம் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் சேலம் லீ பஜார் மஞ்சள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு வாரந்தோறும் புதன்கிழமையில் மஞ்சள் ஏலம் நடக்கிறது. இந்த மஞ்சளை ஏலம் எடுக்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். மஞ்சள் பத்து மாதங்களில் பலன் தரும் பயிராகும். மழை நன்றாக பெய்ததால் தற்போது மஞ்சள் நல்ல விளைச்சலை தந்துள்ளது. இதனால மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து விட்டது. எதிர்பார்த்த அளவில் விலை போகவில்லை. உரிய விலை கிடைக்காததால் கடந்த இரு வாரமாக விவசாயிகள் மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வர தயங்குகின்றனர். வழக்கமாக சேலம் லீ பஜார் மஞ்சள் ஏலத்திற்கு 60 முதல் 70 டன் மஞ்சள் வரும். தற்போது 40 டன் மட்டுமே வருகிறது. விலை இன்னும் குறையும் என்ற எதிர்பார்ப்பில் மஞ்சள் ஏலம் எடுக்க தயங்குகின்றனர். கடந்த மாதம் ஒரு குவிண்டால் ரூ.7500 முதல் ரூ.8500 என விற்பனை செய்யப்பட்டது. தற்போது குவிண்டாலுக்கு ஆயிரம் சரிந்து, ரூ.6500 முதல் ரூ.8 ஆயிரம் என விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு மஞ்சள் தேவை அதிகரிக்கும். அப்போது விலையும் கூடும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.  …

Related posts

திருச்சியில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தரான எஸ்.எஸ்.ஐ. பணியிடைநீக்கம்..!!

சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 40 தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்த நிலையில் அவர்களின் கதி என்ன?

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்..!!