மஞ்சள் காமாலை நோய்க்கு மாணவன் இறந்தது அம்பலம்

சேலம், ஏப்.12: சேலத்தில் பிளஸ்2 மாணவன் மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சேலம் தாதகாப்பட்டி வேலு புதுத்தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் கிரி (19), பிளஸ் 2 தேர்வெழுதியிருந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கிரி வீட்டில் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை நோய் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. அவரது உடல் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் சிலர் அவருக்கு போதை ஊசி போடும் பழக்கம் இருந்ததாகவும் இதன் காரணமாகத்தான் இறந்து போனதாகவும் கூறி தகவல்களை பரப்பினர்.

இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் பெற்றோரிடம் விசாரித்தனர். அவர்கள் மஞ்சள் காமாலை நோயால் தான் இறந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு சர்ச்சை கிளம்பியதால் கிராம நிர்வாக அதிகாரி, பிரேத பரிசோதனை செய்ய போலீசில் புகார் அளித்தார். அதன்படி அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்கு பதிவு செய்தார். தாசில்தார் முன்னிலையில் புதைக்கபட்ட உடலை தோண்டி எடுத்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். மஞ்சள் காமாலை நோயினால்தான் கிரி இறந்து இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் சர்ச்சை கிளப்பியவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை