மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாள் விழா முன்னேற்பாடு கூட்டம்

தேனி, ஏப். 7: கண்ணகி மங்கலதேவி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா கொண்டாடுவது சம்பந்தமாக முன்னேற்பாட்டு ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது. தமிழக, கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு வருகிற மே 5ம் தேதி விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழா கொண்டாடப்படுவது சம்பந்தமாக முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, திருவில்லிப்புத்தூர்-மேகலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த் , உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டி முன்னிலை வகித்தனர்.

இதில் அனைத்துத் துறை அலுவலர்கள், கண்ணகி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழக மற்றும் கேரள பக்தர்கள் குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, குடிநீர் வசதி, தற்காலிக பந்தல், கழிப்பிட வசதி, பாதைகள் செப்பனிடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது குறித்தும், போலீசார் மூலம் உரிய பாதுகாப்பு வழங்குவது குறித்தும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, சுகாதாரத் துறை மற்றும் தீயணைப்புத் துறை மூலம் முதலுதவி வாகனம், தீயணைப்பு மீட்பு வாகனத்தினை தயார் நிலையில் நிறுத்தி வைப்பது குறித்தும், பக்தர்கள் குறைந்தபட்சம் 5 லிட்டர் குவளையில் தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை