மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டால் நடவடிக்கை-கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் பேச்சு

பீளமேடு : மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டல கூட்டத்தில் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கூறினார்.கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல கூட்டம், சிங்காநல்லூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது கவுன்சிலர்கள் பலர் தங்கள்  வார்டு பிரச்சினைகள் பற்றி பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:சிங்கை சிவா (திமுக): வார்டுகளில் குடிநீர் பிரச்னை உள்ளது. அது பற்றிய தகவலையும் அதிகாரிகள் எங்களுக்கு தெரிவிப்பதில்லை. அதேசமயம், அதிமுக பிரமுகர்களின் வீடுகளுக்கு லாரியில் குடிநீர் தண்ணீரை மாநகராட்சி  ஊழியர்கள் வழங்குகின்றனர். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திராவிடன் பாபு (திமுக): விளாங்குறிச்சி  சாலை குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக அங்கு வேலை  நடக்கிறது. ஆனால், இன்னும் வேலை முடியவில்லை. சாலைகள் மோசமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. உயிரிழப்பு ஏற்பட்டால் தான் அதிகாரிகள் அதை சரி செய்வார்களா?. க.விஜயகுமார் (திமுக): எனது வார்டில் 14 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. ஆனால், பக்கத்து வார்டில்  4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. இதனால், எங்கள் வார்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது சொந்த செலவிலும் பல பணிகளை மேற்கொண்டுள்ளேன். 5 ஆண்டுகளுக்கு பிறகு கவுன்சிலர்கள் வந்துள்ளதால், கவுன்சிலர்களிடம் அதிக பணிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களுக்கு சேவையாற்ற நாங்கள் வந்துள்ளோம்.  எனவே அவர்களுக்கு சேவையாற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை.நவீன்குமார் (காங்):  என் வார்டு பரப்பளவில் பெரியதாக உள்ளது. அங்கு சாலை, தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும். இதேபோல், மற்ற கவுன்சிலர்களும், தூய்மை பணியாளர்களை வார்டுகளில் அதிகப்படுத்த வேண்டும். அப்போது தான்  குப்பைகளை உடனுக்குடன் எடுக்க முடியும். குப்பை எடுக்கும் லாரிகளுக்கு 35 லிட்டர் டீசல் மட்டுமே ஒரு நாளைக்கு  வழங்குகின்றனர். டீசல் குறைந்தவுடன் சென்று விடுகின்றனர். வார்டுகளில் சாலை போடும் பணிகள் மிகவும் மெதுவாக  நடக்கிறது. 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும். ஒரு வார்டு கவுன்சிலரின் மகளை தெருநாய் கடித்து  விட்டது. எனவே தெரு நாய் தொல்லைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.பின்னர் மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி பேசியதாவது: மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்பு கொள்ளும் போது சில அதிகாரிகள்  போனை எடுப்பதில்லை. அந்த அதிகாரிகள் அதிமுக ஆதரவு அதிகாரிகளாகவே இன்னும் உள்ளனர். அவர்கள்  தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டால், முதல்வரின் கவனத்திற்கு நானே நேரிடையாக கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளன. குடிநீர் இணைப்பு, சொத்து வரிவிதிப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், காலி இட வரிவிதிப்பு, கட்டிட அனுமதி, பிறப்பு இறப்பு சான்றிதழ், போன்றவைகள் குறித்து மக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது காலதாமதமின்றி குறித்த நேரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், உதவி ஆணையாளர் மாரிச்செல்வி, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், மற்றும் கவுன்சிலர்கள் பாக்கியா தனபால், தீபா இளங்கோ, பொன்னுசாமி, கோவிந்தராஜ், சரஸ்வதி,  ஆதி மகேஸ்வரி, கிருஷ்ணமூர்த்தி, கீதா சேரலாதன் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்….

Related posts

பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் வரை ரூ.1, 121 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் வரை ரூ.1, 121 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி

2024-25ம் ஆண்டு அறிவித்த திட்டங்களின் பணிகள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் : தமிழக அமைச்சர்கள் தகவல்